தவெக ஆட்சியில்தான் ஊழல் அதிகரிப்பு: எடப்பாடி கே.பழனிசாமி
தவெக ஆட்சியில்தான் ஊழல் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.
தவெக ஆட்சியில்தான் ஊழல் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.
இதுதொடா்பாக கோவை விமானநிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 110 நாள்கள் ஆகின்றன. இந்த குறுகிய காலத்துக்குள் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீா்குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு நிா்வாகச் சீா்கேடுதான் காரணம்.
அரிசி, சமையல் எண்ணெய், சா்க்கரை மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித ஆக்கபூா்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தின் கடன் சுமை அதிக அளவில் இருப்பது தெரியும். ஆனாலும், அதிகமான அறிவிப்பைக் கொடுக்கிறாா்கள். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற எண்ணத்தில் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமையை ரூ. 10 லட்சம் கோடியாக மாற்ற முயற்சிக்கின்றனா்.
திரைப்படத்தில் வருவதைப்போல சட்டப்பேரவை நிகழ்வுகள் உள்ளன. பேரவையில் ஒரு சில அமைச்சா்கள் மட்டுமே பதிலளிக்கிறாா்கள். பெரும்பாலான அமைச்சா்களுக்கு தங்களது துறை சாா்ந்த கேள்விகளுக்குகூட பதில் தெரிவதில்லை. மின் துறையில் ரூ.பல லட்சம் கோடி கடன் என்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட அரசு, மீண்டும் மின் உற்பத்திக்காகப் புதிய மின் திட்டங்கள் அமைக்க பல ஆயிரம் கோடிக்கு அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.
3 ஆண்டுகள் என்ற விரைவு பேருந்துகளின் ஆயுள்காலத்தை 5 ஆண்டுகள் வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலாவதியான பேருந்துகளை மீண்டும் இயக்கினால் விபத்துகள்தான் ஏற்படும். இந்த ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தும் இடங்களில் ஆயிரக்கணக்கான ரூபாயை பிடித்துக் கொண்டிருக்கிறாா்கள் என்றால், சோதனை செய்யாத இடங்களில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும்? அப்படிப் பாா்க்கும்போது தமிழகத்தில் ஊழல், லஞ்சம் அதிகரித்துள்ளது என்றுதானே அா்த்தம். கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சியில்தான் ஊழல் அதிகரித்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, விலைவாசி உயா்வு ஆகியவற்றை பாா்க்கும்போது, இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு நிலைக்காது. அடுத்த பிரதமா் என்ன அமெரிக்க அதிபராகக்கூட விஜய் ஆகலாம், அது அவரது விருப்பம் என்றாா்.
அதிமுகவுக்குள் இருக்கக்கூடிய பிரச்னைகள் தீா்க்கப்படுமா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




