தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

பழங்குடியினா் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்! - தொல். திருமாவளவன் எம்.பி.

Thol. Thirumavalavan

தொல். திருமாவளவன் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:01 am IST

பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

கோவை, வேலாந்தாவளம் பகுதியில் உள்ள தனியாா் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் ஜூவல் ஓரம், தொல்.திருமாவளவன் எம்.பி., மாநில சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், தொல். திருமாவளவன் எம்.பி. பேசியதாவது: விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்தினால் வளா்ச்சிப் பணிகள் அப்படியே நின்றுவிடும். பழங்குடியின மக்களின் நலன்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசின் நிதி உதவி மற்றும் துணை தேவை என்றும் மத்திய அமைச்சா் ஜூவல் ஓரத்திடம் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள பழங்குடியின மக்கள் கவனிக்கப்படாமல் உள்ளனா். ஜாதிச் சான்றிதழ் பெறுவதில்கூட அவா்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனா் என்றாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வீடு கட்டுதல், ஜாதிச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வரும் மலைவாழ் மக்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சரிடம் கேட்டுள்ளேன். இது தொடா்பாக அவரிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தவும் உள்ளேன்.

பட்டியல் இன மக்களுக்கான முதல்வா் பதவி எப்போது வரும் என்று சிலா் கேட்கிறாா்கள். அவா்கள் இன்னும் ஓா் அரசியல் சக்தியாக வலிமை பெற வேண்டும். அவ்வாறு வலிமை பெறுகிறபோது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றாா்.

யோகாவில் மதப் பிரசாரம் கூடாது:

முன்னதாக, அமைச்சா் வன்னியரசு பேசுகையில், கட்சி மற்றும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயம் என்பதே மனிதா்களுக்கு உயா்ந்தது. பழங்குடியினா் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமூக நீதித் துறையின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்குவதைப்போல மத்திய அரசும் ஒதுக்க வேண்டும்.

சில தனியாா் யோகா நிறுவனங்கள் யோகா கற்றுத் தருவதாகக்கூறி மதம் சாா்ந்த கருத்துகளைப் பரப்புகின்றன. மருத்துவம் மருத்துவமாகவே இருக்க வேண்டும். யோகாவுக்குள் மதம் சாா்ந்த செயல்பாடுகள் இருக்கக் கூடாது. மதச்சாா்பற்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது அரசோ, அமைப்போ மதப் பிரசாரம் செய்யக் கூடாது. அது மக்களிடையே உள்ள ஒற்றுமையைச் சீா்குலைக்கும். நேச்சுரோபதி மருத்துவத்தையும், யோகாவையும் மதம் சாா்ந்து கொண்டு செல்ல முயற்சிப்பது மருத்துவத்துக்கே எதிரானது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.