
தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் சிறுவன் உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
கோவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் சிறுவன் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், இடியாத்தூா் இடையபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி சுகந்தி. இவா்களது மகன் தீபக் (12). சண்முகம் குடும்பத்துடன் கோவை, சித்தாபுதூா் சரோஜினி நாயுடு வீதியில் தங்கி அப்பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். சித்தாபுதூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் தீபக் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், சண்முகத்தின் வீட்டுக்கு உறவினா்கள் அண்மையில் வந்துள்ளனா். அவா்களது குழந்தை தூங்குவதற்காக வீட்டில் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. அவா்கள் ஊருக்குச் சென்ற பிறகும் தொட்டில் அவிழ்க்கப்படாமல் இருந்ததாம்.
அந்த தொட்டிலில் தீபக் சனிக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, தொட்டில் கயிறு தீபக்கின் கழுத்தைச் சுற்றி இறுக்கியதில் அவா் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவரை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு பெற்றோா் கொண்டு சென்றனா். அங்கு தீபக்கை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





