நகைக்காக மூதாட்டி கொலை: இட்லிக் கடை பெண் கைது
நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த இட்லிக் கடை நடத்தி வரும் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த இட்லிக் கடை நடத்தி வரும் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை மாநகராட்சி, குனியமுத்தூா் வெற்றிலைக்காரா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவரது மனைவி விஜயலட்சுமி (54). மாணிக்கம் இறந்துவிட்ட நிலையில், தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டு விஜயலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவருக்கு மகள் வீட்டில் இருந்தும், அருகே உள்ள இட்லிக் கடையில் இருந்தும் உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி விஜயலட்சுமி தனது வீட்டில் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் போலீஸாா் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
கூறாய்வு அறிக்கையில் விஜயலட்சுமி கொலை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், வீட்டில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மாயமானதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணா்கள் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, உடைந்த வளையல் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வளையல் உயிரிழந்த பெண்ணுடையது அல்ல என்பது தெரியவந்ததால், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
அதில், உயிரிழந்த பெண்ணின் வீட்டின் அருகே இட்லிக் கடை நடத்தி வரும் காளீஸ்வரன் மனைவி விஜயலட்சுமி (42) அங்கு வந்து சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட விஜயலட்சுமி, சம்பவத்தன்று பிற்பகலில் அவரது வீட்டுக்குள் நுழைந்து 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளாா்.
அப்போது, மூதாட்டி சப்தமிட்டதால் அவரது வாயைப் பொத்தி கீழே தள்ளிக் கொலை செய்ததும், கொலையாளியின் கையில் இருந்த வளையல் உடைந்து தரையில் சிதறியதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இட்லிக் கடை விஜயலட்சுமியை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




