மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பவானிசாகர் ஆற்றுநீர் திருட்டைத் தடுக்க வலியுறுத்தல்

பவானிசாகர் அணையிலிருந்து  தண்ணீர் திருடப்படுவதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:06 am

பவானிசாகர் அணையிலிருந்து  தண்ணீர் திருடப்படுவதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபைச் செயலர் சுபிதளபதி  கூறியதாவது:
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக, 150 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந் நீரை 9 கூட்டு குடிநீர்த் திட்டங்கள், பவானி ஆற்றை ஒட்டிய ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் பயன்படுத்துகின்றன. இதுபோன்ற அமைப்புகளுக்கு 100 கனஅடி நீர் போதுமானது. தவிர ஆற்றில் தண்ணீர் வரும் பகுதிகளில் பல்வேறு நீரூற்றுகள் உள்ளன. அந்த ஊற்றுகள் மூலமும் 100 முதல் 150 கனஅடிக்கு மேல் தண்ணீர் கிடைக்கிறது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் 500 கனஅடி நீரை  பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனர். இது ஆலைகள் மற்றும் அனுமதியின்றி நீரை உறிஞ்சுவோருக்கு சாதகமாகச் செயல்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
மேலும், பவானி ஆற்றில்  1000-க்கும் மேற்பட்ட  இடங்களில் அனுமதியின்றி  மின் இணைப்புப் பெற்று தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த மின் இணைப்பைத் துண்டித்து அந்த பம்புசெட்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளிக்கப்பட்டது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு  இறுதி உத்தரவு பெற்று  மாவட்ட நிர்வாகத்திடமும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் எவரும்  மேல் முறையீடு செய்ய முடியாத வகையில் உத்தரவைப் பெற்றபிறகும் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, மின் வாரியமும் அவற்றை அகற்றாமல்  விவசாயிகளை வஞ்சித்து வருகின்றன.
பவானிசாகர் அணையை நம்பி பல ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. மின் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், மழை நீர் போன்றவற்றை சிறிது சிறிதாகச் சேகரித்து பாசனத்துக்கும், பயிர்களுக்கு உயிர் நீராகவும் விவசாயிகள் பயன்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், பொதுப்பணித் துறையினரோ ஒரேநாளில் 500 கனஅடி நீரைத் திறந்துவிட்டு வீணடித்து வருகின்றனர். இவ்வளவு  பிரச்னைகளுக்கு இடையே  சத்தியமங்கலத்துக்கு அருகே  உள்ள நிலக்கிழார்கள் ஒன்றிணைந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, இதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாய அமைப்புகளைத் திரட்டிபோராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.