சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்கால வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 6) தொடங்க உள்ளது.
சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 5 வனச் சரகங்கள் உள்ளன. இங்கு மழைப்பொழிவுக்கு முன், பின் என ஆண்டுக்கு இருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும். இதன்படி, மழைக்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை (ஆக.6) முதல் தொடர்ந்து 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது. இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சத்தியமங்கலம், ஆசனூர் வனச் சரக அலுவலகங்களில் நடைபெற்றன.
கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வன உயிரின ஆராய்ச்சியாளர் சி.சக்திவேல் பயிற்சி அளித்தார்.
இந்த ஆண்டு காகிதமில்லா தகவல் பரிமாற்றம் முறையாக செல்லிடப்பேசி பதிவேற்றம் செய்து அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென புதிதாக எம்.ஸ்டிரப் எனப்படும் மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்லிடப்பேசி வன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின்போது விலங்குகள், தடயங்கள் மற்றும் விவரங்களை செல்லிடப்பேசியில் விடியோ, புகைப்படமாக பதிவு செய்து பின்னர் அதை பதிவேற்றம் செய்து சென்னை சர்வருக்கு அனுப்பப்படும்.
அங்கிருந்து சம்பந்தபட்ட வனக் கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்வதால் அனைத்து தகவல்களையும் காலதாமதமின்றி உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும். மேலும், வன ஊழியர்கள் எந்த இடத்தில் கணக்கெடுப்பு நடத்தினர் என்ற தகவலையும் அதில் பெற இயலும்.
இது தவிர, இந்தக் கணக்கெடுப்பில் வன ஊழியர்கள் ஜிபிஎஸ், ரேஞ்சு பைண்டர் போன்ற கருவிகளை கையாளுவது, 5 கி.மீ. பரப்பளவில் கண்ணில் தென்படும் வனவிலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள், மரங்கள் என அனைத்தும் குறிப்பு எடுத்து அனுப்புவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட வனச் சரக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

