
காவிரி, பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உடைமைகளுடன் வெளியேறி மேடான பகுதிகளுக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்றுள்ளனர்.
காவிரி ஆற்றில் கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பவானியில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து, காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தபோதிலும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இந்நிலையில், தற்போது கர்நாடக அணைகளில் விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் பவானிக்கு புதன்கிழமை மாலை முதல் படிப்படியாக வரத் தொடங்கியதைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவிரிக் கரை கந்தன் நகர், பசவேஸ்வரர் வீதி, பாலக்கரை பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உடைமைகளுடன் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் மேலும் பலர் வெளியேறிச் சென்றனர். அதே நேரத்தில் பவானிசாகர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் பவானி ஆற்றில் விநாடிக்கு 40 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இத்தண்ணீர் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து வருவதால் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, தாழ்வான பகுதிகளை விட்டு பொதுமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், காவிரி ஆற்றின் வெள்ளம் பவானி ஆற்றுக்குள் புகுந்ததால் காலிங்கராயன் அணைக்கட்டு வரையில் தண்ணீர் சுமார் 20 அடி உயரத்துக்குத் தேங்கியது. அதே நேரத்தில் பவானி ஆற்றிலிருந்து வரும் உபரிநீர் காலிங்கராயன் அணைக்கட்டைக் கடந்து வெளியேறத் தொடங்கியது.
1972 ஆம் ஆண்டு இதே போன்று இரு ஆறுகளிலும் ஒரே நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பவானி நகரில் வெள்ளம் புகுந்து பேரழிவு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மத்தியில் புதன்கிழமை மாலை முதல் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது. பவானி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, உடைமைகளுடன் வெளியேறிச் சென்றனர். பீரோ, கட்டில், உடைமைகளை லாரி, வேன்களில் ஏற்றிக் கொண்டு நிவாரண முகாம்களுக்கும், மேடான பகுதிகளுக்கும் சென்றுள்ளனர்.
இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கூடுதுறையில் படித்துறைகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், இரு ஆறுகளும் சங்கமிக்கும் பரிகாரத் தலமான பவானி கூடுதுறையின் நுழைவுவாயில் கதவுகள் மூடப்பட்டன. பரிகார வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டதோடு, கூடுதுறை வளாகத்தில் உள்ள புரோகிதர்கள், பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்கு புதன்கிழமை காலையில் உபரிநீர் இல்லாத நிலையில் படிப்படியாக மாலையில் நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் அணைக்கட்டு வழியாக காவிரி ஆற்றுக்கு வெளியேறி வருகிறது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி பழைய பாலத்தில் மூங்கில் தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனப் போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தின் அளவு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் பவானி நகரின் வலதுபுறம் உள்ள பவானி ஆறு, இடது புறம் உள்ள காவிரி ஆற்றின் நீர்வரத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறும், கரையோரத்தில் வசிப்போர் மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
சுமார் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் காவிரி ஆற்றிலும், அதன் துணை நதியான பவானி ஆற்றிலும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி நகர மக்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






