அறிவியலுக்கு ஆங்கிலம் அவசியம் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியரும், அறிவியல், பொறியியல் ஆராய்ச்சிக் கழக சிறப்பு நிலை ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியுமான எம்.லெட்சுமணன் பேசினார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அதன் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது:
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் 20 ஆண்டுகளாக தேசிய அறிவியல் நாளைக் கொண்டாடி இளம் விஞ்ஞானி விருது வழங்கி வருவதன் மூலம் இளைஞர்களிடையே அறிவியலைப் பரப்பி வருவது பாராட்டுக்குரியது.
இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் இளம் மாணவர்களிடமும், சமுதாயத்திடமும் அறிவியலை எடுத்துச் சென்று இப்போதைய தமிழ்ச் சமூகத்துக்கும், இந்திய சமுதாயத்துக்கும் பெரும் தொண்டாற்றுவது பெருமைக்குரியது.
எந்த ஒரு நாகரீகத்துக்கும் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே இந்நாளின் நோக்கமாகும்.
அறிவியல் என்பது இக்காலகட்டத்தில் ஆங்கிலத்தில்தான் நடத்தப்படுகிறது. ஆனால், கிராமப்புற மாணவர்கள் அதைச் சந்திக்கும்போது சில தடுமாற்றம் இருக்கும். ஆனால், கணினியைப் பயன்படுத்தக் கூடிய பெரும்பாலான மாணவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள முடியும். அறிவியலாளர்களின் அறிவியலைப் பற்றி அறிந்துகொள்ள ஆங்கிலம் அவசியமானது. ஆராய்ச்சி மாணவர்கள், இளம் விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல ஆங்கிலம்தான் தொடர்பு மொழியாக உதவுகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பவர் பாயிண்ட் மூலம் அறிவியல் தொடர்பான கலந்துரையாடலை நடத்தினார். மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
முன்னதாக, ஈரோடு பில்டர்ஸ் கல்லூரிப் பேராசிரியர் ராஜகணபதி வரவேற்றார். வேளாளர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் சரண்யா நன்றி கூறினார். இதில், ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி, ஈரோடு பில்டர்ஸ் கல்லூரி, சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. கல்லூரி, நந்தா கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள்
கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.