ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்
ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்காக கிராம மக்கள் திரண்டு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்காக கிராம மக்கள் திரண்டு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, பெருந்துறை, பட்டக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு முகாமில் அளித்துள்ள மனு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, பட்டக்காரன்பாளையம் பகுதியைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்ப அட்டைகள் மூலம் அருகில் உள்ள அய்யகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். அங்கு சுமார் 1,300 குடும்ப அட்டைகளுக்குப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. பட்டக்காரன்பாளையம் பகுதியில் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் தினக் கூலிகள் என்பதால் நியாயவிலைக் கடைக்குச் செல்ல ஒரு நாள் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து செல்லும் நிலை உள்ளது. எனினும், அவர்களுக்குத் தேவையான பொருள்கள் அங்கு கிடைப்பதில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டக்காரன்பாளையத்தில் புதிய நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனடிப்படையில், அரசு கட்டடத்தில் புதிய கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், ஒரு சிலரின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி நின்றுபோனது.
இந்நிலையில் தற்போது, ரேஷன் கடை இருந்த கட்டடத்தில் நூலகம் தொடங்குவதற்காக பெயர் பலகை, கட்டடத்துக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, மே 13-ஆம் தேதி அப்பகுதி மக்கள் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எனவே, ரேஷன் கடை அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டடத்தை நூலகமாக மாற்ற முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து புதிய நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இலவச வீட்டுமனை கோரி மனு: கோபிசெட்டிபாளையம் தாலுகா, கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமம், அலிங்கியம் காலனி பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 80 வீடுகள் மட்டுமே உள்ளன. மேலும் வீடுகள் கட்ட போதுமான இடவசதி இல்லை. ஒரு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு இடத்தில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
எனவே, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலங்கள் அல்லது தனியார் நிலத்தை அரசு கையகப்படுத்தி வீடு இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆக்கிரமிப்பில் உள்ள கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்: ஈரோடு, சூரம்பட்டி கிராமம், சாஸ்திரி சாலை (115/2-ஆ) பகுதியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு சார்பில் 2.35 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் கடந்த 55 ஆண்டுகளாக நடைபாதை, கிணறு, கழிப்பிடம் ஆகியன உள்ளன. சமுதாயக்கூடம், திருவிழாக்களில் பொங்கல் வைத்தல், சமுதாய சடங்கு, சம்பிரதாய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது பொது பயன்பாட்டில் இருந்து வந்த அப்பகுதி சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...