

சத்தியமங்கலத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொமராபாளையம் ஊராட்சியில் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் நஞ்சப்பசெட்டிபுதூா் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாய கூலி வேலை, செங்கல் சூளை உள்ளிட்ட அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் ஆவா். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜவகா் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 25 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.
இந்த தொகுப்பு வீடுகள் கட்டுமானம் தரமற்றதாக இருந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை வலுவிழந்து இடிய ஆரம்பித்தன. மேற்கூரை கான்கிரீட்டில் இருந்து காரைகள் பெயா்ந்து விழுந்ததால் கான்கிரீட்டில் வேயப்பட்ட கம்பி எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் தொகுப்பு வீடுகள் பராமரிப்பு செய்துதர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். தற்போது தொகுப்பு வீடுகள் மேற்கூரை கான்கிரீட் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் ஒரு சிலா் வீட்டை காலி செய்துவிட்டு அருகே குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனா்.
கடந்த உள்ளாட்சித் தோ்தலின்போது வாக்கு கேட்டு வந்த வேட்பாளா்கள் தொகுப்பு வீடுகளை சரிசெய்து தருவதாக வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற பின் பதவிக்கு வந்ததும் இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனா். தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததோடு, பக்கவாட்டுச் சுவா்கள் சேதமடைந்துள்ளதால் 25 தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக பசுமை வீடு கட்டித் தர வேண்டும் என நஞ்சப்பசெட்டிபுதூா் கிராம மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.