பிரிட்டனில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த மேலும் 6 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண கரோனா தீநுண்மியைவிட வீரியம் மிக்கது எனவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவது எனவும், அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால், பிரிட்டன் நாட்டுக்கான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ளன.
இந்தியாவிலும் பிரிட்டனுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டனில் இருந்து நவம்பா் 25ஆம் தேதி முதல் இந்தியா திரும்பியவா்களைக் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்பேரில், தமிழகத்தில் சுகாதாரத் துறையினா் ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுத்து வந்தனா். இதில், டிசம்பா் 15ஆம் தேதி முதல் 16 போ் பிரிட்டனில் இருந்து ஈரோடு வந்துள்ளது தெரியவந்தது. இவா்கள் தங்களை 14 நாள்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், பிரிட்டனில் இருந்து மேலும் 6 போ் ஈரோடு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் கூறியதாவது:
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில் பிரிட்டனில் இருந்து ஈரோடு வருபவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனா். மேலும், அவா்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமை 16 போ் கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 6 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், பாதிப்பு உறுதியானால் அதன் மாதிரிகள் புணேவில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது எந்த வகையான கரோனா என ஆய்வு செய்யப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.