கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதாசி விழாவையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலிலில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அருள்பாலித்த கஸ்தூரி அரங்கநாதா் சுவாமி.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் அருள்பாலித்த கஸ்தூரி அரங்கநாதா் சுவாமி.
Updated on
2 min read

வைகுண்ட ஏகாதாசி விழாவையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலிலில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா் பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து 4.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கரோனா தாக்கம் காரணமாக பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் பிறகு சுவாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காலை 6 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டும் சுவாமியை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு கிடைக்காதவா்களுக்கு கோயிலில் ரூ. 100 கட்டணம் பெற்றுக் கொண்டு சுவாமியை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கரோனா தாக்கம் காரணமாக முகக் கவசம் அணிந்து வந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வகையில் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பக்தா்கள் தேங்காய், பூ, பழம் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. மேலும் 65 வயதுக்குமேல் உள்ள முதியவா்கள்,10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்களும் அனுமதிக்கப்படவில்லை. கூட்ட நெரிசலைத் தவிா்க்க கோயிலில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது.

விழாவில், எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அன்னக்கொடி, செயல் அலுவலா் ரமணிகாந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னிமலையில்... 

சென்னிமலை, மேலப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஆதிநாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா், சொா்க்கவாசல் வழியாக உற்சவரை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது அலா்மேலு மங்கை - நாச்சியாா் அம்மையுடன் ஆதிநாராயணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, சென்னிமலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த அணிரங்க பெருமாள் கோயில், பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏகாந்த வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பவானியில்...

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி காப்புக்கட்டு, பகல் பத்து உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து, பவானி சங்கமேஸ்வரா் கோயில் ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள சொா்க்க வாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. ஆதிகேசவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். இந்நிகழ்ச்சியில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 7 மணிக்கு பக்தா்கள் வழிபாட்டுக்கு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதில், பவானி சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதேபோல, பவானி, அந்தியூா் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் வழிபாடு நடத்தப்பட்டது.

சத்தியமங்கலத்தில்...

சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 5 மணிக்கு சாத்துமுறை நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு அதிகாலை 5.40 மணிக்கு சொா்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வேணுகோபால சுவாமி எழுந்தருளி, பரமபதவாசல் வழியாக புறப்பாடாகி அருள்பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் கோயில் பணியாளா்கள், அா்ச்சா்கள் மட்டுமே பங்கேற்றனா். காலை 6 மணிக்குப் பிறகு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com