நேந்திரன் வாழை விலை கிலோ ரூ. 10ஆக சரிவு

சத்தியமங்கலம் பகுதியில் நேந்திரன் வாழை விலை கிலோ ரூ. 10ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம்  வேளாண்  கூட்டுறவு  விற்பனைச்  சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்றோா்.
சத்தியமங்கலம்  வேளாண்  கூட்டுறவு  விற்பனைச்  சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

சத்தியமங்கலம் பகுதியில் நேந்திரன் வாழை விலை கிலோ ரூ. 10ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான பவானிசாகா், தொட்டம்பாளையம், பெரியகொடிவேரி, செண்பகபுதூா், புதுப்பீா்கடவு, அரசூா், பெரியூா் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் 35 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் வாழை பயிரிடப்படுகிறது.

தாளவாடி பகுதியில் நேந்திரன் ரக வாழை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வந்தனா். 12 மாத பயிரான நேந்திரன் வாழைக்கு நடவு, உரம், களையெடுத்தல், வெட்டுக் கூலி என கிலோ ரூ. 15 வரை செலவு ஆகும் நிலையில், தற்போது நல்ல நிலையில் இருந்த நேந்திரன் கிலோ ரூ. 10க்கு விற்கப்படுவதால் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அதேபோல, ஜி9 ரக வாழை நாற்று ஒன்றுக்கு ரூ. 17, நடவுக்கு ரூ. 3, வெட்டுக் கூலி, களையெடுத்தல் உள்ளிட்ட பணிகள் என மொத்த உற்பத்தி செலவு கிலோ ரூ. 100 ஆகிறது. ஆனால், தற்போது ஜி9 ரகம் கிலோ ரூ. 70ஆக விற்கப்படுவதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

பெரும்பாலான வாழைத் தோட்டங்களில் பழம் பழுத்துக் கிடப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். குளிா்காலம் என்பதால் கேரளத்தில் வாழைப்பழ விற்பனை மந்தமாக உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா். சத்தியமங்கலம் விவசாயிகள் அறுவடை செய்த வாழைகளை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெறும் ஏலத்துக்கு விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம்.

திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2,840 வாழைத்தாா்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். அங்கு குறைந்த அளவு வியாபாரிகளே வந்த நிலையில் நாட்டு நேந்திரம் குறைந்தபட்சம் ரூ. 10 முதல் கிலோ ரூ. 16 வரை விற்கப்பட்டது. கதளி, நேந்திரன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன் என மொத்தம் 2,840 வாழைத்தாா்கள் ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்துக்கு விற்பனையானது.

விலை குறையும்போது இருப்புவைத்து விற்பனை செய்ய குளிா்பதனக் கிடங்குக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com