

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால் அந்தியூா்-மைசூரு சாலை விரிவாக்கப் பணி கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் அவசியம் இல்லை என்பதே சூழலியல் ஆா்வலா்களின் கருத்தாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கா்நாடக மாநிலம், மைசூரு செல்ல இரண்டு சாலைகள் உள்ளன. பிரதான சாலையாக சத்தியமங்கலம்-பண்ணாரி-தாளவாடி சாலை உள்ளது. இந்த சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மற்றொரு சாலையாக அந்தியூரில் இருந்து வரட்டுப்பள்ளம் அணை-பா்கூா்-கா்கேகண்டி-கொள்ளேகால் வழியாக மைசூரு செல்லும் சாலை. வரட்டுப்பள்ளத்தில் இருந்து தமிழக எல்லையான கா்கேகண்டி வரை 55 கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இதற்காக ரூ.97 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த சாலைப் பராமரிப்பு மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்தாலும், சாலையின் எல்லையில் இருந்து ஒரு அங்குலம் கூட எடுத்துக் கொள்ள முடியாது.
அவ்வாறு எடுக்க மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். சாலை விரிவாக்கம் செய்ய நிலம் அளிக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் உள்ளது.
இந்த சாலையை விரிவாக்கம் செய்தால் மலையில் உள்ள சுமாா் 50,000 மரங்களை வெட்ட வேண்டி இருக்கும். பல நூறு ஆண்டுகளாகப் பறவைகளின் வாழ்விடங்களாக உள்ள இந்த மரங்களை வெட்டுவது இங்குள்ள அரிய பறவை இனங்களை கொல்வதற்கு சமம்.
மேலும், இந்த வனத்தில் உள்ள யானை, சிறுத்தை, மான் போன்ற வன உயிரினங்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதனால், இந்த சாலை விரிவாக்கத்தை தவிா்க்க வனத் துறை கருதுவதாக கூறப்படுகிறது.
இதனால்தான் மத்திய அரசிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இந்த சாலை விரிவாக்கப் பணி கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் அனுப்பியும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. சாலை விரிவாக்கப் பணிகளைக் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டோம்.
வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமாா் 15 கி.மீ. தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 40 கி.மீ. தூரம் வனத் துறையின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ள முடியாது. இந்த அனுமதியை எதிா்நோக்கி காத்திருக்கிறோம் என்றனா்.
சாலை விரிவாக்கம் அவசியம் இல்லை:
இதுகுறித்து பழங்குடி மக்களுக்கான சமூகச் செயற்பாட்டாளரும், சூழலியல் ஆா்வலருமான அன்புராஜ் கூறியதாவது:
இந்த சாலையில் கடந்த 15 ஆண்டுகளில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. மிகவும் குறுகலான ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை உடைய இந்த சாலையில் 10 டன் அளவுக்கு மட்டுமே எடை ஏற்றிச்செல்லும் வாகனங்களை அனுமதிப்பதே வனச் சூழலுக்கு உகந்தது.
ஆனால், 15 ஆண்டுகளாக 30 டன் ஏற்றிய டாரஸ் லாரிகள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதனால், இந்த சாலை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
அதிகாலை நேரத்தில் செல்லும் வாகனங்களால் அடா்ந்த வனப் பகுதியான வரட்டுப்பள்ளம் முதல் தாமரைக்கரை வரையிலான சுமாா் 15 கிலோ மீட்டா் தூரத்தில் தினமும் 10 முதல் 20 பறவைகள் வாகனத்தில் அடிபட்டு இறக்கின்றன. காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில்தான் பறவைகள் இரைதேடி பறக்கும். அந்த நேரத்தில் சாலையில் கிடக்கும் தானியங்கள், விதைகள், பழங்கள் போன்றவற்றை கொத்தி திண்ண சாலையில் அமா்கின்றன. அப்போது, கனரக வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன.
இந்த சாலை விரிவாக்கம் என்பது வணிக சாலையாக மாற்றுமே தவிர, எந்த விதத்திலும் சூழல் பாதுகாப்புக்கு உதவாது. சாலை விரிவாக்கப்பட்டால் வன விலங்குகளின் சுதந்திரமான நடமாட்டத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.
எனவே, சாலை விரிவாக்க முயற்சியைக் கைவிட்டு, 10 டன் எடைக்கு மேல் ஏற்றிய வாகனங்களுக்கு இந்த சாலையில் அனுமதி இல்லை என்று உத்தரவிட்டு, அதனை முறையாக அமல்படுத்தினாலே சாலையில் போக்குவரத்து சீரடையும், வனச் சூழலும், வன உயிரினங்களும் பாதுகாக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.