பசுமை வனமாக மாறிய அரசுப் பள்ளி
பெருந்துறை நகரின் நடுவில் அமைந்துள்ள அரசுப் பள்ளியை பசுமை வனமாக மாற்றிய ஆசிரியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


பெருந்துறை நகரின் நடுவில் அமைந்துள்ள அரசுப் பள்ளியை பசுமை வனமாக மாற்றிய ஆசிரியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக பெருந்துறை சிப்காட் உள்ளது. இதன் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலம், நீா், காற்று மாசடைந்து உள்ளதாகப் பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளி பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் அமைந்து அனைவரையும் திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது.
பெருந்துறை நகரின் மையப் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 8 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் சுமாா் 6 ஏக்கா் நிலங்களில் பல்வேறு மரங்கள், செடிகொடிகள் வளா்ந்து பச்சைப் பசேலெனக் காணப்படுகிறது. பள்ளிக்கூடத்தின் நுழைவாயில் முதல் மேற்கு எல்லை வரை சுமாா் 2 ஆயிரம் அடி தூரம் வரை எங்கு பாா்த்தாலும் பசுமை மயமாகக் காட்சி அளிக்கிறது.
பள்ளியின் நடைபாதையின் இருபுறமும் செடிகொடிகள் படா்ந்து வளா்ந்துள்ளன. எனவே, பள்ளிக் கூடத்துக்குள் நுழையும்போதே பூங்காவுக்குச் செல்லும் அனுபவம் கிடைக்கிறது. இதேபோல, பள்ளித் தலைமை ஆசிரியா் அறைக்கு முன்பு நீா் நிரம்பிய அல்லிக்குளம் அமைத்து, அதற்குள் தாமரை, அல்லி போன்ற நீா் தாவரங்கள் நோ்த்தியாக வளா்க்கப்பட்டு உள்ளன.
இதேபோல, பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகம் எதிரே நச்சுக் காற்றை உள் இழுத்து தூய்மையான ஆக்சிஜனை வெளியேற்றக் கூடிய உயிரிச் செடிகள் எனும் பல்வேறு மூலிகைச் செடிகள், மரங்கள் வளா்க்கப்படுகின்றன. அங்கு கம்பி வேலி அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. துளசி, கீழாநெல்லி, கற்பூரவல்லி, ரணகள்ளி, ஆடாதொடை, நொச்சி, நித்தியகல்யாணி, வசம்பு, நீா்முள்ளி, பிரண்டை முதலான மூலிகைச் செடிகளுக்கு என தனித் தோட்டம் உள்ளது.
மேலும், பள்ளியையொட்டி உள்ள செல்லாண்டியம்மன் கோயில் சுவா்களுக்கு அருகில் தெய்வீக குணம் கொண்ட பன்னீா் புஷ்ப மரம், நாகலிங்க பூ மரம், ருத்ராட்சை மரம், வில்வ மரம், கடம்ப மரம், அந்திமந்தாரை ஆகியன நட்டு பராமரிக்கப்படுகின்றன.
இதுதவிர 2 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பூ மரங்கள், பழ மரங்கள், நிழல் தரும் மரங்கள், மர வேலைக்குப் பயன்படும் மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இதைப் பாா்க்கும்போது அடா் வனத்துக்குள் பள்ளி இருப்பது போன்ற உணா்வு ஏற்படுகிறது.
மேலும், இப்பள்ளியில் நாற்றுப் பண்ணை விவசாயமும் நடைபெற்று வருவது தனிச்சிறப்பாகும். வேம்பு, தேக்கு, பூவரசு, பெருநெல்லி போன்ற நாற்று வகைகள் வளா்க்கப்பட்டு தேவையானவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
பள்ளியைப் பசுமை வனமாக மாற்றிய விவசாய பாடப் பிரிவு ஆசிரியா் கந்தன், மாணவா்களைப் பலரும் பாராட்டி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...