ஈரோடு புத்தகத் திருவிழாவில் ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் சுமார் ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது என பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை

ஈரோடு: ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் சுமார் ரூ.7 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது என பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.

ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் திடலில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கிவைத்தார். இந்த புத்தகத் திருவிழா செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 16) இரவுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 230 அரங்கில் அதிக அளவில் நூல்கள் விற்பனையாகியுள்ளது. அறிவியல், இலக்கியம், வாழ்க்கை வரலாற்று நூல்களை அதிகமாக வாங்கிச் சென்றுள்ளனர். கடந்த புத்தகத் திருவிழாவில் 4 லட்சம் மாணவர்கள் உள்பட 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் வாசகர்கள் வந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.

ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். மலேசியா, நார்வே, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்கள், புத்தகம் வாங்குவோர் வந்துள்ளனர்.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்துள்ளனர். மலைப் பகுதி மாணவர்களும் வந்தனர். தவிர கரூர், கோவை மாவட்டங்களிலிருந்தும் பரவலாக மாணவர்கள் வந்தனர்.

கடந்த 18 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தினமும் மாலையில் நடக்கும் சொற்பொழிவு மற்றும் சிந்தனை அரங்கில், மிகச்சிறந்த பேச்சாளர்கள், சங்கத் தமிழ் பாடல்கள் இசை நிகழ்ச்சி, நாடகம், 10 நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆளுமைகள் பன்னாட்டுத் தமிழரங்கம் நிகழ்வு என பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நடைபெற்றது. கொடுமணல் அகழாய்வு, தொல்பொருள் கண்காட்சி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கான ஜி.டி.நாயுடு விருதும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும்,  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஹைதரபாத் மத்தியப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் மெ.முத்தமிழரசன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.7 கோடி அளவுக்கு மேல் புத்தகங்கள் விற்பனையானது. இந்தாண்டும் அதைவிட குறையாத அளவுக்கு புத்தகம் விற்பனையாகியுள்ளது. இந்த தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  கடந்த 3 நாள்களாக புத்தகத் திருவிழா அரங்குகளில் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.

மாணவ, மாணவியருக்கு சேமிப்பு பழக்கத்துடன், புத்தகங்கள் வாங்க வேண்டும், வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் உண்டியல் முறை கொண்டு வரப்பட்டது. ரூ.1 லட்சம் உண்டியலுக்கு மேல் வழங்க திட்டமிடப்பட்டு, 75 சதவீதத்துக்கு மேல் குழந்தைகள் உண்டியலை பெற்றுச் சென்றுள்ளனர். 

கடந்த புத்தகத் திருவிழாவில் பெற்றுச்சென்ற உண்டியல்களில் 10,000-க்கும் மேற்பட்ட உண்டியல்களை கொண்டு வந்து அதில் சேகரித்த தொகைக்கு புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர்.  அதுபோல் ரூ.250-க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவ்வாறு 5,000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

மக்கள் சிந்தனைப் பேரவைச் செயலர் ந.அன்பரசு, பொருளாளர் க.அழகன் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com