ஈரோட்டில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் வேளாளர் கல்லூரி சார்பில், ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில், சர்வதேச யோக தின விழா நடந்தது.
ஈரோட்டில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
Published on
Updated on
2 min read

ஈரோடு: உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் வேளாளர் கல்லூரி சார்பில், ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில், சர்வதேச யோக தின விழா நடந்தது. விழாவுக்கு முன்னிலை வகித்து, உலக சமுதாய சேவா சஙகத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் பேசியதாவது:

ஐக்கிய நாடுகள் சபையில், பிரதமர் மோடியின் முயற்சியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கடந்த 2015-ம் ஆண்டு முதல், இந்த நாள் சர்வதேச யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த தீர்மானத்திற்கு 177 நாடுகள் ஒப்புதல் அளித்து, யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. 

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில், 2004-ம் ஆண்டு முதல், ‘யோகமும் மனித மான்பும்’ எனும் பெயரில் யோகாவை ஒரு கல்வியாக, ஒரு பாடத்திட்டமாக வரையறை செய்து கற்பிக்கத் தொடங்கியுள்ளோம். இதுவரை 40 லட்சம் பேர் இதிலே பயிற்சி பெற்றுள்ளனர். காயகல்பம் என்ற பயிற்சியினை 50 லட்சம் பேர் பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் 21 நாடுகளில் செயல்பட்டு வரும், எங்களது அமைப்பு 200 அறக்கட்டளைகளை, அறிவுத் திருகோயில்களைக் கொண்டுள்ளது. 16  ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 

பல்கலைக்கழங்களோடு இணைந்து இதுவரை 93 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் படிப்பு வழங்கியுள்ளோம். 60 ஆயிரம் பேருக்கு பட்டயப் படிப்பும், பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிலைநிலை பட்டம் 8 ஆயிரம் பேருக்கும், முதுநிலை பட்டம் 38 ஆயிரம் பேருக்கும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. யோகா குறித்து 320 பேர் பி.ஹெச்டி பெற்றுள்ளனர். 

தற்போது காவல்துறையைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். யோகா, தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்கை யோகா பயிற்சியினால், என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் பார்த்துள்ளோம். உடல்நலம், மனநலம், அறிவுநலம், சமுதாய நலன் இந்த நான்கையும் உள்ளடக்கிய பயிற்சியை அளித்து, ஆன்மீக கல்வி மையமாக செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

இவ்விழாவில், வாழ்த்துரை வழங்கி வேளாளர் மகளிர் கல்லூரி செயலர் எஸ்.டி.சந்திரசேகர் பேசும்போது, ‘இந்தியாவில் தோன்றிய யோகக்கலை, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. யோகா கற்றால் உடல், மனம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாணவர்கள் நல்ல கல்வி பயில முடிகிறது. யோக பயிற்சி பெற்றவர்கள், பலமடங்கு கல்வியில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் என்றார். 

இவ்விழாவிற்கு தலைமையேற்று ஈரோடு ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி பேசியதாவது, நான் முழுமையான யோகப்பயிற்சி மேற்கொள்பவன் அல்ல. ஆனால், யோகா மூலம் நாம் என்ன பெற முடியும் என்பதை சொல்ல விரும்புகிறேன். நான் அடிப்படையில் இசைக்கலைஞன் என்பதால், எனது தியானம் என்பது இசையாக வைத்துக் கொண்டுள்ளேன்.

அதுபோல, ஆனந்தபைரவி ராகம் பாடினால், சோகமாக இருந்தாலும் மகிழ்ச்சியாகி விடுவோம். மலையமாருதம் ராகம் கேட்டால், சோம்பல் போய், சுறுசுறுப்பான நிலை வந்து விடும். இந்த வகையில் இயற்கையிலேயே, இசை போல் நிறைய விஷயங்கள் உள்ளன.  

நமது மனது 24 மணி நேரமும் சிந்தித்தால், சோர்வடைந்து விடும். எனவே, குறிப்பிட்ட நேரமாவது சிந்தனையின்றி மனதை வைத்திருந்தால், அது வலிமை அடையும். அதற்கு யோகா பயிற்சி உதவும். மன அமைதி இருந்தால்தான் கற்பனைத்திறன் வரும். இன்று உலகில் நடக்கும் சாதனைகளுக்குப் பின்னால் கற்பனைத்திறனே உள்ளது. அதேபோல், சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு தேவை.  இந்த விழிப்புணர்வுக்கு தியானமும், யோகாவும் உதவுகிறது. 

எதிர்காலத்தைப் பற்றி நினைத்து கவலையடைந்து, தற்போது கையில் உள்ள நிகழ்காலத்தை மறந்து விடுகிறோம். இந்த நிமிடத்தில் வாழ்வதை விட சிறந்தது எதுவும் இல்லை. இதற்கும் யோகா பயிற்சி உதவும். நான் பாடும்போது, பாடலில் மட்டும் கவனம் இருக்கும். வேறு எங்கும் சிந்தனை செல்லாது. எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதற்கு பதிலாக, அதற்காக திட்டமிடுங்கள். உலகிற்கு நம்மால் என்ன செய்ய முடியுமோ, உதவ முடியுமோ அதனைச் செய்ய வேண்டும். அந்த சேவை செய்யும் எண்ணத்தை உருவாக்க யோகா பயிற்சி உதவும். நமக்கு என்ன தேவை, எது தேவையில்லை என்பதை உணர்ந்து மனதை ஒருமுகப்படுத்தவும் யோகா உதவுகிறது என்றார். 

முன்னதாக வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் செ.கு.ஜெயந்தி வரவேற்றார். உலக சமுதாய சேவா சங்க ஈரோடு மண்டல தலைவர் வி.எம்.வெங்கடாசலம் நன்றி கூறினார். விழாவில், வேளாளர் அறக்கட்டளை உறுப்பினர் சின்னசாமி, தொழிலதிபர்கள் ராஜமாணிக்கம், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழா நிறைவில், வேளாளர் மகளிர் கல்லூரி மாணவியர், பல்வேறு  யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com