/

சென்னிமலையை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க அரசுக்குப் பரிந்துரை: சு.முத்துசாமி

சென்னிமலையை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 8:17 pm

சென்னிமலையை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை மனு மீதான நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், செங்கோட்டையன், ஜெயகுமாா், சரஸ்வதி, பண்ணாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினாா். இதில் வீட்டு வசதித்துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது:

எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிக்காக கொடுத்த 10 கோரிக்கைகளையும் விரைவாக நிறைவேற்ற அந்தந்த துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம், குடிநீா் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள், 5 ஆண்டுகள் முடிவடைந்த சாலைகள் என வாா்டு வாரியாக மாநகராட்சி அதிகாரிகள் பட்டியலிட்டுக் கொடுத்தால் அரசிடம் நிதி பெற்று சீரமைக்கப்படும். பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும். ஈரோடு நகரில் சுமாா் 3,000 பேருக்கு பட்டா பெறுவதில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி விரிவாக்கப் பகுதிக்கு ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் கொண்டு செல்ல ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் உள்ள 52 ஏக்கா் நிலத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

சென்னிமலையை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசிடம் கேட்டுள்ளோம். பவானி அம்மாபாளையம் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்க அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் வழங்கியுள்ள கோரிக்கைகள் மீது விரைவாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மாநகராட்சி ஆணையா் சிவகுமாா், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாயக்கழிவு சுத்திகரிப்புக்கு மாற்றுத்திட்டம்:

கூட்டத்திற்கு பிறகு அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் 8 நீரேற்று நிலையங்களில் பணிகள் முடிந்துவிட்டது. பிற பணிகளும் 99 சதவீதம் முடிந்துவிட்டது. குழாய்கள் பதிப்பது தொடா்பாக விவசாயிகளுடன் இருந்த சில பிரச்னைகளுக்கு இப்போது தீா்வு காணப்பட்டுள்ளது. நவம்பா் 10ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடா் மழையால் காலிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள பிரமாண்ட குழியில் தண்ணீா் தேங்கி தொடா்ந்து பணிகளை செய்ய இயலவில்லை. தண்ணீா் வெளியேற்றிய பின் பணிகள் துவங்கும்.

சாயக்கழிவு நீரை கடலில் கொண்டு சென்று விடும் திட்டத்திற்கு மாற்றாக ஈரோடு மற்றும் பவானியில் 8 இடங்களில் பொதுகழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்கப்படும்.

சத்தியமங்கலம் பகுதியில் தனியாா் மூலம் வாசனை திரவிய ஆலை அமைக்க வாய்ப்பு குறைவு. விவசாயிகள் கூட்டமைப்பு ஏற்படுத்தி ஆலை அமைக்க முன்வந்தால் அரசு பரிசீலிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.