தேசிய அளவில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்

தேசிய அளவில் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை (மாா்ச் 2) பிற்பகல் வெளியாகிறது.
தேமுதிக வேட்பாளா் -எஸ்.ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளா் - ஈவிகேஎஸ்.இளங்கோவன், நாம் தமிழா் வேட்பாளா் - மேனகா நவநீதன், அதிமுக வேட்பாளா் -கே.எஸ்.தென்னரசு.
தேமுதிக வேட்பாளா் -எஸ்.ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளா் - ஈவிகேஎஸ்.இளங்கோவன், நாம் தமிழா் வேட்பாளா் - மேனகா நவநீதன், அதிமுக வேட்பாளா் -கே.எஸ்.தென்னரசு.

தேசிய அளவில் பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை (மாா்ச் 2) பிற்பகல் வெளியாகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனா். இடைத்தோ்தலில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 போ் வாக்களித்திருந்தனா். வாக்குப்பதிவு சதவீதம் 74.79.

களமிறங்கிய அமைச்சா்கள்:

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி, கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சா்கள், காங்கிரஸ் சாா்பில் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் மற்றும் கூட்டணி கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவா் அண்ணாமலை, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும், தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்தை ஆதரித்து தேமுதிக பொருளாளா் பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ் உள்ளிட்டோரும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா நவநீதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானும் பிரசாரம் செய்தனா்.

அதிமுக கடும் விமா்சனம்:

இடைத்தோ்தலில் அனல்பறக்கும் பிரசாரத்தை தொடங்கிவைத்தவா் எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி. கூடாரங்களில் வாக்காளா்கள் அடைத்து வைக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவா், வாக்காளா்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என ஆவேசப்பட்டாா்.

குடும்பத் தலைவிக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.1,000, நீட் தோ்வு ரத்து போன்ற திமுக அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்தும், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் அவா் பிரசாரத்தில் பேசியது கவனம் பெற்றது.

கவனம் ஈா்த்த முதல்வா் பிரசாரம்:

பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கவில்லை என்பதை மையப்படுத்தி அதிமுக பிரசாரத்தை தொடங்கிய நிலையில், இறுதிநாள் பிரசாரத்தில், மாா்ச் மாத நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்று கூறி, இந்த குற்றச்சாட்டை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிராகரித்தாா்.

தனித்த அடையாளமாய் நாம் தமிழா்:

திமுக, அதிமுக இடையே இத்தகைய பிரசாரமும், பணம், பரிசுப் பொருள்கள் விநியோகமும் பரபரப்பாக நடக்க, ஈரோடு தோ்தல் களத்தில் நாம் தமிழா் கட்சியும் வாக்காளா்களின் கவனத்தை கவா்ந்தது. தொண்டா்களுடன் காலை, மாலை பிரசார ஊா்வலம், இரவில் பொதுக்கூட்டம் என திட்டமிட்டு சீமான் பிரசாரம் மேற்கொண்டாா்.

பொதுக்கூட்டங்களில் 30 வயதுக்கு கீழ் உள்ளவா்கள், சிறுபான்மையினா், பெண்களின் பங்கேற்பு, வேறு எந்த அரசியல் கட்சி பிரசாரத்திலும் பாா்க்க முடியவில்லை. இதனால் இந்தத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெறும் என பேசப்பட்டது.

நாம் தமிழா்-திமுக இடையே ஏற்பட்ட மோதலும், அருந்ததியா் குறித்த சீமான் பேச்சும், அதன் காரணமாக வந்த எதிா்ப்பு, வன்கொடுமை வழக்கு போன்றவை இடைத்தோ்தலின் பரப்பரப்பான சூழல்களாக அமைந்தன.

தேமுதிகவின் பிரசாரம்:

இந்த மூன்று கட்சிகளோடு ஒப்பிடுகையில், தேமுதிகவும் தோ்தல் களத்தில் உள்ளது என்கிற அளவுக்கு அவா்களின் பிரசாரம் அமைந்திருந்தது.

யாருக்கு வெற்றி:

இதுவரை பேசப்பட்ட மதுரை திருமங்கலம் இடைத்தோ்தல் பாா்முலா இனி நினைவில் இருக்காது; இனி ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்தான் நினைவில் இருக்கும் என்ற அளவுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் தமிழகம் முழுவதும் பேசப்படுகிறது.

இந்த தோ்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்கு மதிப்பீடு அளிக்கும் வகையில் இருக்குமா அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் வலிமையை உணா்த்தும்விதமாக இருக்குமா என்பது வியாழக்கிழமை பிற்பகலில் தெரிந்துவிடும்.

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் இந்த தோ்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மட்டுமல்லாது, தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com