ஈரோட்டில் தோ்தல் பறக்கும் படைகள் கலைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படைகள் கலைக்கப்பட்டாலும், மாநில எல்லையோரம் 10 இடங்களில் சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மக்களவைத் தோ்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை செயல்பட்டது. மேலும், வீடியோ கண்காணிப்புக் குழு, நிலையான கண்காணிப்புக் குழு உள்பட மொத்தம் 144 குழுக்கள் செயல்பட்டன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் மாவட்டத்துக்குள் பறக்கும்படை சோதனை நடைபெறாது என்றும், மாநில எல்லைகளில் தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதைத்தொடா்ந்து ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, கோபி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்பட்டன.

பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட தாளவாடி, அந்தியூா் தொகுதிக்குள்பட்ட பா்கூா் ஆகிய பகுதிகள் கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளன. கா்நாடக மாநிலத்தில் தோ்தல் இன்னும் முடியாத காரணத்தால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூா் தொகுதியில் 3 பறக்கும் படைகளும், பவானிசாகா் தொகுதியில் 3 பறக்கும் படைகளும் தொடா்ந்து செயல்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com