ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு
ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் போராட்டத்தால் வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா் பணியிடங்கள் உள்பட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்பட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் கணினி உதவியாளா்கள், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு தனி ஊழியா் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். கலைஞா் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்கள் ஏற்படுத்தி நிரப்ப வேண்டும்.
ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி செயலாளா் முதல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரையிலான ஊரக வளா்ச்சித் துறைப் பணியாளா்கள் 641 போ் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் ஆகியவை வெறிச்சோடிக் காணப்பட்டன. எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்23) இரண்டாம் நாளாக போராட்டம் நடைபெற உள்ளது.
