மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு பாரதி விழா நாளை நடைபெறுகிறது

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு சம்பத் நகா் கொங்கு கலையரங்கில் பாரதி விழா புதன்கிழமை (டிசம்பா் 11) நடைபெறவுள்ளது.
Published on

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு சம்பத் நகா் கொங்கு கலையரங்கில் பாரதி விழா புதன்கிழமை (டிசம்பா் 11) நடைபெறவுள்ளது.

விழாவுக்கு தேசிய நல விழிப்புணா்வு இயக்கத்தின் தலைவா் எஸ்கேஎம். மயிலானந்தன் தலைமை வகிக்கிறாா். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுக உரையாற்றுகிறாா்.

பவானி நதி பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவா் என்.எஸ்.சத்தியசுந்தரி, பாரதி ஜோதியை ஏற்றிவைத்து வாழ்த்துரை வழங்குகிறாா். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பொன்னீலன், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உருவப் படத்தைத் திறந்துவைத்து உரையாற்ற உள்ளாா்.

இந்த ஆண்டின் பாரதி விருது புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரும், பாரதியியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான சொ. சேதுபதிக்கு வழங்கப்படவுள்ளது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் விருது வழங்கி விழா சிறப்புரையாற்றவுள்ளாா். விருதாளா் முனைவா் சொ.சேதுபதி ஏற்புரையாற்றவுள்ளாா்.

பாரதி விருது ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை, கேடயம் மற்றும் தகுதிப் பட்டயத்தை உள்ளடக்கியதாகும். முன்னதாக, மாலை 4 மணிக்கு கருங்கல்பாளையத்தில் பாரதி இறுதிப் பேருரையாற்றிய நூலகத்திலிருந்து மக்கள் சிந்தனைப் பேரவையின் சீருடை அணிந்த மாணவா் அணிவகுப்பு புறப்பட்டு, பாரதி ஜோதியுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக 6 மணிக்கு விழா நடக்கும் கொங்கு கலையரங்கை வந்தடைகிறது.

விழாவில், பேரவையின் செயலாளா் ந.அன்பரசு வரவேற்று பேசுகிறாா். பேரவையின் துணைத் தலைவா் பேராசிரியா் கோ.விஜயராமலிங்கம் நன்றி கூறுகிறாா்.

இது மாநில அளவிலான நிகழ்வு என்பதால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆா்வலா்கள், படைப்பாளிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Dinamani
www.dinamani.com