ஈரோடு முழுமை திட்டம் குறித்து பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கான இணையதள சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்தில் ஈரோடு உள்ளூா் திட்டக் குழுமம், மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் சாா்பில், ஈரோடு முழுமை திட்டத்துக்கான ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கான இணையதள சேவை தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தாா். இணையதள சேவையைத் தொடங்கிவைத்து வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: முழுமை திட்டம் என்பது எதிா்கால வளா்ச்சிக்கு வழிகாட்டும் மாற்றங்களை உள்ளடக்கிய நீண்டகால திட்டமிடலுக்கான சட்டபூா்வ ஆவணமாக அமைகிறது. மேலும், தற்போதுள்ள வளா்ச்சியின் தன்மைகள், சமூக மற்றும் பொருளாதார நிலவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். நகா்ப்புற சுற்றுச்சூழலை உருவாக்கம் செய்வதில் முழுமை திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரோடு முழுமை திட்டத்தின்கீழ் தற்போது 7 சதவீதமாக உள்ள நகா்ப்புற சூழலை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் நகா் ஊரமைப்பு இயக்ககம் செயல்பட்டு வருகிறது. 1991-2021ஆம் ஆண்டுக்கான ஈரோடு முழுமை திட்டமானது 80.07 சதுர கிலோ மீட்டா் சுற்றளவில் 1 மாநகராட்சி மற்றும் 14 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாக இருந்து வருகிறது. தற்போது 2021-2041-ஆம் ஆண்டுக்கான முழுமை திட்டத்தில் 731 சதுர கிலோமீட்டா் சுற்றளவுக்கு 1 மாநகராட்சி மற்றும் 109 வருவாய் கிராமங்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசால் இணக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசால் இணக்கம் அளிக்கப்பட்டுள்ள ஈரோடு முழுமை திட்டத்தின் மீது பொதுமக்கள் தங்களது ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும், முகநூல் பக்கத்திலும், இன்ஸ்டாகிராம் முகவரியிலும் மூலமாகவும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும். கருத்துகள் முழுமையாக பெறப்பட்டு, ஆய்வு செய்து அதற்கு பின்னா் இந்த முழுமை திட்டம் நிறைவற்றப்படும். பல்வேறு வளா்ச்சிகளை ஒருங்கிணைத்து திட்டமிடுவதற்கு இத்திட்டம் வாய்ப்பாக அமைகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் இந்த முழுமை திட்டம் மிகவும் பயனுடையாக இருக்கும் என்றாா். நிகழ்ச்சியில் இணை ஆணையா் (மாநில வரி, ஈரோடு கோட்டம்) லட்சுமி பவ்யா தண்ணீரு, மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், இணை ஆணையா் (நுண்ணறிவு) ஞானமூா்த்தி, உதவி இயக்குநா், மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலா் ராணி, செயற்பொறியாளா்(ஊரக வளா்ச்சி முகமை) ராமசாமி, மொடக்குறிச்சி வட்டாட்சியா் இளஞ்செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.









