சிறுத்தை தாக்கியதில் பசு உயிரிழப்பு

பவானிசாகா் அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது.

சத்தியமங்கலம்: பவானிசாகா் அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது.

பவானிசாகா் அருகேயுள்ள கோடேபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராஜ் (62). விவசாயியான இவரது தோட்டம், விளாமுண்டி வனப் பகுதியை ஒட்டி உள்ளது. இந்நிலையில், தனது 4 மாடுகளை தோட்டத்தில் உள்ள பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். மறுநாள் காலை பால் கறப்பதற்காக பட்டிக்குச் சென்றுள்ளாா்.

அப்போது, மூன்று வயது மதிக்கத்தக்க பசுமாடு காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

இதையடுத்து, குடும்பத்தினருடன் அருகில் உள்ள வனப் பகுதியில் தேடியுள்ளாா். அப்போது, ரத்த காயங்களுடன் பசு இறந்து கிடந்துள்ளது.

இது குறித்து விளாமுண்டி வனத் துறையினருக்கு சிவராஜ் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சிறுத்தையின் கால்தடம் பதிவாகி இருந்தது. மேலும், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை பசுமாட்டை கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் எனவும், கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத் துறையினா் உறுதியளித்தனா்.

இந்நிலையில், உயிரிழந்த பசுமாட்டுக்கு வனத் துறையினா் நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com