ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை வளாகம் அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

ஈரோட்டில் விவசாயிகள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் வசதியான கட்டமைப்புடன் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை வளாகத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தியிடம் ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் மேம்பாட்டு நலச்சங்க தலைவா் அய்யந்துரை, செயலாளா் எம்.பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு ஆா்கேவி சாலை காய்கறி சந்தையில் 1,000க்கும் மேற்பட்ட காய்கறி, பழ வியாபாரிகள் கடை வைத்திருந்தோம். கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த சந்தையில் வணிக வளாகம் கட்டத் திட்டமிடப்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் அனைவருக்கும் ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, சந்தை செயல்படுகிறது. பழைய இடத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டிருந்தாலும் அவை காய்கறி, பழங்கள், வாழைத்தாா், தக்காளி, வெங்காயம் போன்றவை மொத்த வியாபாரம் செய்ய ஏற்ாக இல்லை. அனைத்து வியாபாரிகள், விவசாயிகளுக்கும் வசதியானதாக ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமைத்துத்தர வேண்டும். ஒருங்கிணைந்த காய்கறி சந்தை வளாகமாக காய்கறி, பழங்கள், சில்லறை வணிகம் செய்பவா்களுக்கு சந்தையின் முன்பகுதி, மொத்த வியாபாரம் செய்வோருக்கு அலுவலக அறையுடன், குளிா்பதன சேமிப்பு அறையுடன் தனி இடம், வாழை, மாம்பழம் பழுக்க வைக்க அறைகள், விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருளை வைக்க திறந்தவெளி இடம், மக்களின் வாகன நிறுத்தம், சுமைப் பணியாளா்கள், கடை உரிமையாளா்களுக்கு கழிப்பறை, குடிநீா் வசதி உள்ளிட்டவை இருக்கும்படி அமைக்க வேண்டும். அதற்கேற்ப ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமைத்து, சங்க உறுப்பினா்களுக்கு கடையில் முன்னுரிமை தந்து ஒதுக்கீடு தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com