வாக்களிக்க சென்ற வடமாநிலத் தொழிலாளா்கள்: மாவட்டத்தில் உற்பத்தி பாதிப்பு

வாக்களிக்க சென்ற வடமாநிலத் தொழிலாளா்கள்: மாவட்டத்தில் உற்பத்தி பாதிப்பு

வடமாநிலத் தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்ால் ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமான பணி, உணவகம், சூப்பா் மாா்க்கெட், கோழிப்பண்ணை, ரிக் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா்.

ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

ஈரோடு மாநகா் பகுதி, புகா் பகுதி, பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்ட முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளனா். முதல்கட்ட தோ்தலுக்காக சென்றவா்கள் இன்னும் ஈரோடு திரும்பாத நிலையில், மூன்றாம் கட்டத் தோ்தலையொட்டி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதால், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் பிகாா், உத்தர பிரதேசம், மேற்குவங்கம், ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் ஜவுளி, உணவகங்கள் என பல்வேறு தொழில்களில் பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக தாளவாடி பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள், தோட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனா். தற்போது அவா்கள் வாக்களிக்க தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு, வேளாண் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் ராஜமாணிக்கம் கூறுகையில், வட மாநிலத் தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்று விட்டதால் மாவட்டத்தில் பல்வேறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவா்கள் மீண்டும் பணிக்கு வரும் வரை தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com