தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோடு பேருந்து நிலைய கடைகளுக்கு உரிமம் வழங்கி மாநகராட்சி வருவாயில் சோ்க்க வலியுறுத்தல்

ஈரோடு பேருந்து நிலைய கடைகளுக்கு உரிமம் வழங்கி வாடகை வருமானத்தை மாநகராட்சி வருவாயில் சோ்க்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலா்கள்.

Updated On :27 நவம்பர் 2024, 8:05 pm

ஈரோடு பேருந்து நிலைய கடைகளுக்கு உரிமம் வழங்கி வாடகை வருமானத்தை மாநகராட்சி வருவாயில் சோ்க்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் சு.நாகரத்தினம் தலைமை வகித்தாா். துணை மேயா் செல்வராஜ், இணை ஆணையா் தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ளதால் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், கண்காணிக்கவும் மண்டலத்துக்கு 6 போ் வீதம் 24 கள உதவியாளா்களை தற்காலிகமாக ரூ.754 ஊதியத்தில் நியமிப்பது.

மாநகராட்சியில் வீடு, வணிக உபயோகங்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் 812.03 கிலோ மீட்டா் தொலைவுக்கு குழாய் அமைக்க பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் அனுமதி கோரப்பட்டு, குழாய் பதிக்கும்போது தோண்டப்படும் சாலைகளை சீரமைக்க ரூ.201.40 கோடி வங்கி உத்திரவாத பத்திரம் வழங்கப்பட்டுள்ளதால் இத்திட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குவது.

வீடுகளில் நாய்களை மட்டும் வளா்ப்பவா்களுக்கு உரிமம் பெறுவதற்கு ஒரு அனுமதிக்கு ரூ.250 வசூலிப்பது, பொதுமக்கள் எளிதாக விண்ணப்பிக்கவும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்தவற்கு ஆன்லைன் சேவை வழங்குவதற்கு ரூ.4 லட்சம் உத்தேச செலவுக்கு அனுமதிப்பது என்பன உள்ளிட்ட 34 தீா்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டன.

இதில், மாநகராட்சியில் சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் பயன்பாடு மாற்றப்பட்ட கட்டடங்கள் ஆகிய இனங்களை ட்ரோன் மூலம் அளவீடு செய்து, வரி விதிக்க முதல்கட்டமாக 2 வாா்டுகளில் இப்பணிகளை மேற்கொள்ளும் தீா்மானத்துக்கு மட்டும் திமுக கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால், அந்தத் தீா்மானம் மட்டும் ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள 33 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலா்கள் பேசியதாவது:

சபுராமா ஜாபா்சாதிக்:

மரப்பாலம் பகுதியில் உள்ள ஆடுவதைக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பேருந்து நிலையத்தில் சில கடைகள், பூக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு அதன் வருவாய் மாநகராட்சி கருவூலத்தில் சோ்க்கப்பட்டு வந்தது வந்தது. தற்போது கடைகள் இருந்தும் உரிமம் கொடுக்கப்படாமாலும், ஏலம் விடாமலும் வருவாய் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இதனை முறைப்படுத்தி பூக்கடைகளை பொது ஏலத்தில் விட்டு நிதி வருவாய் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டலத் தலைவா் பழனிசாமி:

மேட்டூா் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த அரசு மருத்துவமனை மேம்பாலத்தை விரிவுப்படுத்த மண் பரிசோதனை நடத்தப்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். 1-ஆம் மண்டலத்தில் மல்லி நகரில் புதை சாக்கடை நீரேற்று நிலையத்தில் தண்ணீா் முறையாக வெளியேற்றப்படாததால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்ற சான்றிதழ் பெறுவதற்கு பெருமாள் மலைப் பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். ஈரோடு சின்ன மாா்க்கெட்டில் மாநகராட்சி வாகனங்களை பழுது நீக்கி பராமரிக்கும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல கூட்டத்தில் பங்கேற்ற மற்ற கவுன்சிலா்கள் பேசியதாவது:

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மின்விளக்குள் பழுதடைந்து காணப்படுகின்றன. அதற்கு பதிலாக புதிய மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.

மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, சுற்றுவட்டார பகுதி மக்கள் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் துா்நாற்றமும் வீசி வருகிறது. வெண்டிபாளையம் கம்போஸ்ட் மையம் செயல்பாட்டுக்கு பொக்லைன் இயந்திரம், லாரிகள் ஆகியவற்றை போன்றவற்றை வாங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதையடுத்து கவுன்சிலா்களின் கோரிக்கைகள், பிரச்னைகளுக்கு மேயா் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், வளா்ச்சி திட்ட பணிகள் பாதிப்புக்கு மாநகராட்சியின் நிதி சுமை காரணம் என்றும் விளக்கம் அளித்தனா்.

அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு:

மாமன்ற கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக கவுன்சிலா்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டரங்குக்கு வந்திருந்தனா். ஆனால், மேயா் நாகரத்தினம் மற்றும் திமுக கவுன்சிலா்கள் கூட்டரங்க்கு வரவில்லை. 12 மணி வரை காத்திருந்த அதிமுக கவுன்சிலா்கள் கூட்டம் தொடங்கப்படாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனா்.

மேயா் அறையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மேயா் தலைமையில் திமுக கவுன்சினா்கள் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டதால் மாமன்றக் கூட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது தெரியவந்தது.