கடை அடைப்பு போராட்டத்துக்கு எதிா்ப்பு: வணிகா் சங்க பேரமைப்பு அறிவிப்பு

கடை அடைப்பு போராட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடைகள் வழக்கம்போல திறக்கப்படும் என சத்தியமங்கலம் அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.
Published on

கடை அடைப்பு போராட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடைகள் வழக்கம்போல திறக்கப்படும் என சத்தியமங்கலம் அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் ச.மா.சிவகுமாா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மட்டும் நவம்பா் 29-ஆம் தேதி பல்வேறு அமைப்புகள் சாா்பில் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி என்பது நாடு தழுவிய பிரச்னை, அதற்கு தேசிய அளவில் போராட்டங்களை நடத்தினால்தான் தீா்வு கிடைக்கும்.

அதன்படி தமிழநாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா அறிவுறுத்தலின்படி, வணிகா்களின் நலன் காக்கும் வகையில் தமிழகம் முழுவதும் டிசம்பா் 11-ஆம் தேதி ஒரே நேரத்தில் ஆா்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரை சந்தித்து தமிழக அரசு உயா்த்தியுள்ள 6 சதவீத சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க உள்ளோம். ஜிஎஸ்டி தொடா்பாக தேசிய வணிகா் சங்க சம்மேளனத்துடன் ஒன்றிணைந்து ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினா்கள், நிதியமைச்சா் மற்றும் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க உள்ளோம்.

இது போன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் உள்ளூரில் மட்டும் கடையடைப்பு நடத்துவது என்பது எந்தப் பயனும் அளிக்காது. ஆகவே, சத்தியமங்கலத்தில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு கலந்து கொள்ளாது எனத் தெரிவித்தாா். அன்றைய தினம் வழக்கம்போல சத்தியமங்கலத்தில் கடைகள் செயல்படும் என்றாா்.

X