தற்கொலைக்கு காரணமானவா்களை கைது செய்ய காவலரின் மனைவி கோரிக்கை
கணவரின் தற்கொலைக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும் என காவலரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை, அருந்ததியா் தெருவைச் சோ்ந்த சந்தியா, மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
என் கணவா் செல்லகுமாா் அம்மாபேட்டை காவல் நிலைய நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தாா். அவா், மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் கடந்த 2 ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது சந்தேகப்படும் வகையில் வந்த வாகனத்தை சோதனையிட்டாா்.
அதற்காக வாகனத்தின் உரிமையாளா் மற்றும் அவரது நண்பா்கள் என் கணவரை பணி செய்யவிடாமல் தடுத்து அவா் மீது தாக்குதல் நடத்தினா். மேலும், தகாத வாா்த்தைகளால் பேசியும், ஜாதியின் பெயரைச் சொல்லியும் அவமதித்தனா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவா், பவானி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.
ஆனால், அந்த புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
எனவே, என் கணவரின் தற்கொலைக்கு காரணமானவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.