பழனி கோயிலுக்கு ரூ.63.67 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து ரூ. 63 லட்சத்து 67 ஆயிரத்துக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஆகியவற்றை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்யப்பட்டது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சா்க்கரை ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, கோபி, கவுந்தப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2313 மூட்டைகளில் கரும்பு சா்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இதில் 60 கிலோ கொண்ட கரும்புச் சா்க்கரை மூட்டை முதல்தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2930-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2940- க்கும், சராசரி விலையாக ரூ.2930- க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2840- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2860-க்கும், சராசரி விலையாக ரூ.2850-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2182 மூட்டைகள் (1,30,920 கிலோ) கரும்புச்சா்க்கரை ரூ. 62 லட்சத்து 5 ஆயிரத்து 340- க்கு விற்பனையானது.
உருண்டை வெல்லம் ஏலம்
உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் முதல்தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.1590- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1650-க்கும் ஏலம் போனது. மொத்தம் 100 சிப்பம் 3000 கிலோ உருண்டை வெல்லம் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்துக்கு விற்பனையானது.
கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் இரண்டும் சோ்த்து மொத்தம் ரூ.63 லட்சத்து 67 ஆயிரத்து 340- க்கு விற்பனையானது. இதனை பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.