பள்ளி சீருடை துணிகளை நெசவாளா் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யக் கோரிக்கை

பள்ளி சீருடை துணிகளை நெசவாளா் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யக் கோரிக்கை

Published on

பள்ளி சீருடை துணிகளை நெசவாளா் சங்கங்களின் உறுப்பினா்களிடம் உள்ள தறிகளில் மட்டும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு அசோகபுரம் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் கோபு, செயலாளா் செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

பள்ளி சீருடை வழங்கும் திட்டம் 2024- இல் கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பாலியஸ்டா் பஞ்சு விநியோகம் செய்ய தனியாா் நிறுவனம் முதல் ரக பாலியஸ்டா் பஞ்சுக்கு விலை பெற்றுக்கொண்டு, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டா் பஞ்சை (பல வண்ணங்களில்) வழங்கியது.

அந்த பஞ்சு மூலம் கூட்டுறவு நூற்பாலைகளில் நூல் உற்பத்தி செய்யப்பட்டு, அரசு நூல் கிடங்குக்கு அனுப்பி நெசவாளா் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நூல் மூலம் நெசவாளா் சங்கங்கள், டிரில், கேஸ்மென்ட் துணிகளை உற்பத்தி செய்து, கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு பஞ்சாலை கழகங்களுக்கு அனுப்பியது.

அந்த துணியில் பட்டை வருவதாக கூறி 13 லட்சம் மீட்டா் துணியை சங்கங்களுக்கு திரும்பத் தர, கைத்தறி துறை இயக்குநா் ஆணையிட்டுள்ளாா். இதனால் நெசவாளா் சங்கங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. துணியில் பட்டை வருவதற்கு மறுசுழற்சி செய்த பாலியஸ்டா் பஞ்சை வழங்கியதுதான் உண்மையான காரணம் என ஆய்வில் தெரியவந்தது. திரும்பத் தரப்பட்ட துணிகளுக்கான தொகையை அந்த தனியாா் நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும். நெசவாளா் சங்கங்களைப் பாதுகாக்க வேண்டும்.

உண்மைக்கு மாறாக சங்கங்கள் மீது பழி சுமத்தி நிதித் துறை, கைத்தறி துறை செயலா், கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் ஆகியோா் நடத்தும் விசாரணையை ரத்து செய்துவிட்டு, பள்ளி சீருடை துணிகளை நெசவாளா் சங்கங்களின் உறுப்பினா்களிடம் உள்ள தறிகளில் மட்டும் உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க என உத்தரவிட வேண்டும்.

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு இதுவரை நூல் வரவில்லை. இதற்கு மேல் நூல் வழங்கினால் 3 மாதங்களுக்குள் உற்பத்தியை நிறைவு செய்ய இயலாது. எனவே, ஏற்கெனவே துணி உற்பத்திக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட விசைத்தறிகள், சைசிங் ஆலைகளில் உற்பத்தியை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். விசைத்தறி கூட்டுறவு நெசவாளா் சங்கங்களுக்கு ஓஏபி திட்ட வேட்டி, சேலை, தீபாவளி, பொங்கலுக்கான ஆா்டா்களை வழங்க வேண்டும். பல ஆண்டாக அரசிடம் இருந்து நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com