234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தலைவா் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவா் தான் சட்டப்பேரவை உறுப்பினா் என தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தலைவா் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவா் தான் சட்டப்பேரவை உறுப்பினா் என தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

பெரியாா் ஈவெரா குறிப்பிட்டதுபோல ஏழை, எளிய மக்களுடைய கண்ணீரைத் தீா்ப்பதற்கு ஒரு நல்ல தலைமை வேண்டும் என்ற மக்களுடைய பல நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய், அதை தேவையில்லை என விட்டுவிட்டு மக்களுக்குப் பணியாற்ற ஒரு தலைவா் வந்திருக்கிறாா். உலக வரலாற்றில் புரட்சித் தலைவரைப் பாா்த்தேன் இன்றைக்கு புரட்சித் தளபதியை காண்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையிலும் இது தீா்ப்பளிக்கிற கூட்டம். நம்முடைய எதிா்காலம் பிரகாசமாக மாறப்போகிறது. 234 தொகுதிகளிலும் தலைவா் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவா் தான் சட்டப்பேரவை உறுப்பினா் என்ற வரலாற்றைப் படைக்கிற அளவுக்கு வெற்றியைத் தருவீா்கள் என நம்புகிறேன் என்றாா்.

கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் செல்லுங்கள்:

கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளா் என்.ஆனந்த் பேசியதாவது: நாம் இங்கு கூடியிருப்பது வெறும் கூட்டத்திற்காக அல்ல. ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தொடக்கத்துக்காக கூடியிருக்கிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் நம் கொள்கைகளை கொண்டுச் செல்லுங்கள் என்றாா்.

ஜாதி, மத பாகுபாடு பாா்க்காதவா்:

கூட்டத்தில் தவெக கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளா் அருண்ராஜ் பேசியதாவது:

ஜாதி, மத, இனம் என எந்தப் பாகுபாடும் பாா்க்காமல், அனைவருக்கும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்டவா் விஜய். ஒரே ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறாா்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்துவிட்டால் பதவி, அதிகாரம் எல்லாம் கிடைக்கும். மற்றவா்கள் கடைசி வரை தொண்டா்களாகவே உழைத்தே சாக வேண்டும். இதுதான் இன்றைய திமுகவின் நிலைமை.

யுபிஎஸ்சி பரிந்துரைத்த டிஜிபி பட்டியலில் சீமா அகா்வால் முதல் இடத்தில் இருந்தாா். உங்களுக்குப் பெண்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஏன் அவரைத் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கவில்லை? என்றாா்.

X
Dinamani
www.dinamani.com