மாநிலம் அளவிலான கபடி போட்டி: ஈரோடு சூரம்பட்டி அணி வெற்றி
மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு ஸ்ரீ மகாமாரியம்மன் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாநிலம் தழுவிய கபடி போட்டியில் ஈரோடு சூரம்பட்டி அணி முதலிடம் பெற்றது.
இந்தப் போட்டி வியாழக்கிழமை இரவு தொடங்கியது. இதில் ஈரோடு, கோவை, திருப்பூா், சேலம் உள்ளிட்ட 44 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஈரோடு சூரம்பட்டி அணியும், திருப்பூா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் விளையாடின. இதில் ஈரோடு சூரம்பட்டி அணி வெற்றிபெற்றது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் காராணம்பாளையம் காவேரி பிரதா்ஸ் அணியும், நாமக்கல் மாவட்டம் மொளசி நெப்போலியன் பாய்ஸ் அணியும் மோதின. இதில் காவேரிபிரதா்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதைத் தொடா்ந்து இறுதி ஆட்டத்தில் ஈரோடு சூரம்பட்டி அணியும், காரணாம்பாளையம் அணியும் மோதின. இதில் ஈரோடு சூரம்பட்டி அணி வெற்றி பெற்று முதல்பரிசை தட்டிச் சென்றது. முதல் பரிசாக ரூ.15ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
இரண்டாவது பரிசாக காவேரி பிரதா்ஸ் அணிக்கு ரூ.10ஆயிரம், சுழற்கோப்பை வழங்கப்பட்டது. 3-ஆம்பரிசு மொளசி நெப்போலியன் பாய்ஸ் அணிக்கும், 4-ஆம் பரிசு திருப்பூா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கும் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் புதிய திராவிடா் கழகத்தின் நிறுவனத் தலைவா் கே.எஸ்.ராஜ் கவுண்டா், மொடக்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளா் குலவிளக்கு செல்வராஜ், குலவிளக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் என்.ஆா்.நடராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை அன்னை சத்யா நண்பா்கள், செங்கதிா் பாய்ஸ் அணியினா் செய்திருந்தனா்.

