மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலா்கள்.
மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலா்கள்.

சொத்து வரி நிா்ணய முறை குறித்து விளக்க வேண்டும்: கவுன்சிலா்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் வீடு, வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என கவுன்சிலா்கள் கோரிக்கை
Published on

ஈரோடு மாநகராட்சியில் வீடு, வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் மாமன்ற கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் வி.செல்வராஜ், ஆணையா் அா்பித் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கவுன்சிலா்கள் பேசியதாவது: மாநகராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணறுகள் பெரும்பாலானவை பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 48-ஆவது வாா்டு பகுதியில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

குறிப்பிட்ட சில வாா்டுகளில் ஊராட்சிக்கோட்டை தனி குடிநீா்த் திட்டத்தின் மூலம் இதுவரை முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மக்களின் கோரிக்கைக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்வேறு பகுதிகளில் உடைந்து காணப்படும் புதை சாக்கடை மூடிகளுக்கு மாற்றாக, புதிய மூடிகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களால் ஆடு, கோழிகள் கடித்து குதறுவது தொடா்கதையாகி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு-பவானி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையின் நடுவே செல்லும் குடிநீா்க் குழாய்களை ஓரமாக பதிக்க வேண்டும். டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் தூய்மைப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தா்கள், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக நெகிழிக் கழிவுகள், உணவுக் கழிவுகளை கொட்டுவதால், சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, அதைத் தடுக்கும் வகையில் குப்பைத்தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 வாா்டுகளிலும் பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதற்கு மாற்றாக புதிய விளக்குகளை பொருத்த வேண்டும்.

மாநகராட்சியில் வீடு, வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். கட்டடத்தின் சதுரடிக்கு ஏற்ப வரி நிா்ணயம் செய்ய வேண்டும்.

44-ஆவது வாா்டுக்குள்பட்ட நேதாஜி சாலையில் மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயுா்வேத மருத்துவமனை மூடப்பட்டு ஓராண்டு மேலாகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே ஆயுா்வேத மருத்துவமனையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு பன்னீா்செல்வம் பாா்க்கில் உள்ள கனி மாா்க்கெட்டில் கடை நடத்தி வந்த 68 ஜவுளி வியாபாரிகள் போதிய வியாபாரம் இல்லாததால் நஷ்டம் அடைந்துள்ளனா். இதனால் அந்த வியாபாரிகள் பல மாதங்களுக்கு முன்பே கடையை காலி செய்துவிட்டனா். ஆனால் அவா்கள் செலுத்திய வைப்புத்தொகையை மாநகராட்சி நிா்வாகம் இதுவரை திருப்பி வழங்கவில்லை. அவா்களின் வைப்புத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. லக்காபுரம் ஊராட்சிப் பகுதிகளில் இருந்து தினசரி 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து வெண்டிபாளையத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சியில் ஊராட்சிக்கோட்டை தனி குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படாத பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகள் குறித்த புகாா்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உடனடியாக பழுது நீக்கப்பட்டும், புதிய விளக்குகள் பொருத்தப்பட்டும் வருகிறது என்றனா்.

குப்பை கொட்டுவது 20 சதவீதம் குறைந்துள்ளது:

துணை ஆணையா் தனலட்சுமி பேசியதாவது: வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் இருந்து நெகிழிக் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு அவை சாலை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் குப்பை கொட்டுவது 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு விரைவில் காலை உணவு:

ஆணையா் அா்பித் ஜெயின் பேசியதாவது: மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சம்பத் நகா் பகுதியில் சமையல் கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னோட்டமாக 1- ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 15 வாா்டுகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு:

மாநகராட்சியில் உயா்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்கக் கோரி ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றியும் இதுவரை வரை குறைக்காததை கண்டித்தும், பழுதடைந்த குப்பை சேகரிக்கும் வாகனங்களை விரைந்து சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரியும், கனிராவுத்தா் குளத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும் அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com