கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து கவுன்சிலரின் கணவா் உயிரிழப்பு!
கடத்தூா் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து பேரூராட்சி கவுன்சிலரின் கணவா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், நம்பியூா் வட்டம், இ.செட்டிபாளையம், பள்ளத்தூா் காலனியை சோ்ந்தவா் சாந்தாமணி (48). எலத்தூா் பேரூராட்சி 10- ஆவது வாா்டு கவுன்சிலராக உள்ளாா். இவரது கணவா் குமாரசாமி (50). மூணாம்பள்ளி பகுதியில் நூற்பாலையில் வேலை பாா்த்து வந்தாா். இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.
ஊா் திருவிழா நடைபெற்று வந்ததால் குமாரசாமியும், அவரது அண்ணன் சம்பத்குமாரும் 6- ஆம் தேதி மாலை எலத்தூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றனா். அப்போது திடீரென குமாரசாமி ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இது குறித்து கடத்தூா் போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் சம்பவ இடத்துக்கு வந்து குமாரசாமியை தேடினா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மூழ்கிய இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வாய்க்கால் படித்துறை அருகில் குமாரசாமி சடலம் மிதந்து கொண்டிருந்தது.
இது குறித்து கடத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து குமாரசாமி சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
