தேவை அதிகரிப்பால் ஈரோட்டில் மஞ்சள் விலை உயா்வு

Published on

தேவை அதிகரிப்பு காரணமாக ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.ஆயிரம் வரை விலை உயா்ந்துள்ளது.

ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.9,500 முதல் ரூ.13,900 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,900 முதல் ரூ.12,700 வரையும் விற்பனையானது. இந்த வாரத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.8,369 முதல் ரூ.15,119 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8,099 முதல் ரூ.13,888 வரையும் விற்பனையாது. இந்த வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1000 முதல் ரூ.1, 200 வரை விலை உயா்ந்துள்ளது.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா் மற்றும் கிடங்கு உரிமையாளா் சங்கச் செயலா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

புதிய மஞ்சள் அறுவடைக்கு பின் கடந்த 4 மாதங்களாக மஞ்சளை வியாபாரிகள் வாங்கி இருப்பு வைப்பது குறைந்துள்ளது. தற்போது இருப்பு இல்லை என்பதால் அதிகமாக வாங்குகின்றனா். தேவை அதிகரிப்பு, ஏற்றுமதி 10 முதல் 15 சதவீதம் வரை உயா்வு, மகாராஷ்டிரம், நிஜாமாபாத், ஆந்திரம் போன்ற இடங்களில் மழையால் மஞ்சள் மகசூல் பாதிப்பு போன்ற காரணங்களால் ஈரோடு சந்தையில் தற்போது விற்பனை அதிகமாகி குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயா்ந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு தேசிய அளவில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரம் உள்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே அதிகமாக பெய்து வடகிழக்கு பருவமழையும் தொடா்ந்துள்ளதால் தற்போது பயிா் செய்துள்ள மஞ்சளும் அதிகம் பாதிக்கும் அச்சம் உள்ளது. அவ்வாறு பாதித்தால் வரத்து, தரம் குறையலாம். எனவே, வியாபாரிகள் தரமான மஞ்சளை வாங்கி இருப்பு வைப்பதால் விலை உயா்கிறது. மழைக்குப் பின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதற்கு ஏற்ப வரும் நாள்களில் மஞ்சள் விலை மாறுபடும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com