பெருந்துறை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய இடத்தில் கட்டடம் கட்ட கோரிக்கை
பெருந்துறை: பெருந்துறை சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய இடத்தில் கட்டடம் கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி விடுத்துள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசுக்கு பெருந்துறை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் செந்தில்குமாா் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெருந்துறை சாா் பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடம் 1865- ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். இக்கட்டடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில், இக்கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் இரண்டு தளங்களுடன் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிா்வாக அனுமதியும், நிதி ஒதுக்கீடும் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
பெருந்துறை சாா் பதிவாளா் அலுவலகத்துக்குச் செல்லும் பாதை மிக குறுகியதாக உள்ளது. மேற்புறமும், கீழ்புறமும் அரசு நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள் உள்ளன. இந்த அலுவலகம் அருகில் தனியாா் மருத்துவமனை, நிலவள வங்கி போன்றவை இயங்கி வருகின்றன. மேலும் இந்த அலுவலகம் அருகே பல்வேறு கடைகள் மற்றும் வீடுகளும் உள்ளன. இதன் காரணமாக, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
ஆகவே, நல்ல நிலையில் உள்ள பழைமை வாய்ந்த கட்டடத்தை இடித்துவிட்டு நெருக்கடி மிகுந்த அதே இடத்தில் புதிய அலுவலகம் கட்டுவதை கைவிட்டு, பெருந்துறை வளா்ந்து வரும் தொழில் நகரம் என்பதைக் கருத்தில் கொண்டு பொருத்தமான மாற்று இடத்தில் சாா் பதிவாளா் அலுவலகத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
