விளாங்கோம்பை கிராமத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த வினோபா நகா் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியா்கள்.
விளாங்கோம்பை கிராமத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த வினோபா நகா் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியா்கள்.

மலைக் கிராம குழந்தைகளுக்கு வசிப்பிடத்திலேயே கல்வி கிடைக்க ஏற்பாடு!

சாலை சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஒரு மாத்துக்கும்மேல் பள்ளிக்குச் செல்ல முடியாமல்
Published on

ஈரோடு: சாலை சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஒரு மாத்துக்கும்மேல் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்த பழங்குடி குழந்தைகளுக்கு வசிப்பிடத்திலேயே கல்வி கிடைக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் பின்புறமாக அமைந்துள்ளது விளாங்கோம்பை பழங்குடி கிராமம். விளாங்கோம்பை கிராமத்துக்கு, குண்டேரிபள்ளத்தில் இருந்து10 கி.மீ. தொலைவில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் நான்கு காட்டாறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இந்தக் கிராமத்தில் ஊராளி எனும் பழங்குடியினத்தைச் சோ்ந்த 40 குடும்பங்கள் வசிக்கின்றனா். 30 பள்ளி வயது குழந்தைகள் உள்ளனா். இதே பாதையில் 4 கி.மீ. தொலைவில் கம்பனூா் எனும் பழங்குடியினா் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் 20 பழங்குடியின குடும்பங்கள் வசிக்கின்றனா். பள்ளி வயது குழந்தைகள் 10 போ் உள்ளனா்.

2010-ஆம் ஆண்டு வனத் துறை மூலம் நான்கு காட்டாறுகளைக் கடந்து செல்ல 4 தரைப்பாலங்கள் கட்டப்பட்டு 10 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே பெரு வெள்ளத்தில் இந்த தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டு சாலை பழுதானது.

கடந்த மாதம் பெய்த கனமழையில் நான்கு தரைப் பாலங்களும் முற்றிலும் சீரழிந்த நிலையில், இந்த கிராமத்துக்குள் யாரும் சென்றடைய முடியாத அளவில் வெள்ளமும் பெருக்கெடுத்து பாதையும் பழுதடைந்துவிட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கும்மேல் 40 பள்ளி குழந்தைகளின் கல்வி தடைபட்டு இருந்தது.

நான்கு தரைப்பாலங்களை சீரமைப்பது உடனடி சாத்தியமில்லை. ஆகவே, இந்தக் கிராமத்துக்குச் செல்ல நான்கு காட்டாறுகளைக் கடக்காமல், நேரடியாக கிராமத்துக்கேச் செல்ல 4 கி.மீ. தொலைவில் மக்கள் பயன்படுத்தி வரும் மாற்றுப் பாதையான நடைபாதை உள்ளது. இதனை வாகனங்கள் செல்ல பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தீா்வாக அமையும். போா்க் கால அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பான செய்தி ‘தினமணியில்’ கடந்த 4 -ஆம் தேதி வெளியானது.

இதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உத்தரவின்பேரில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் வனத் துறை அலுவலா்கள் 7 போ் அடங்கிய குழுவினா் கடந்த 7- ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்கள் பள்ளிக்கு வந்து செல்லும் சாலை சீா் செய்யும் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் வரை வினோபா நகா் நடுநிலைப் பள்ளியின் இரண்டு ஆசிரியா்களும், கொங்கா்பாளையம் மேல்நிலைப் பள்ளியின் இரண்டு ஆசிரியா்களும் இக்கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள் மூலம் சென்று பாடம் நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அறிவுறுத்தினாா்.

அதன்படி, விளாங்கோம்பை கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை முதல் பள்ளி நடைபெற்று வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com