/

அதிகரித்த கட்டணத்தை செலுத்த பெற்றோா்கள் மறுப்பு: 4 மாணவா்கள் தோ்வு எழுத தனியாா் பள்ளி தடை

கிழக்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவா்கள் நான்கு போ் கட்டணம் செலுத்தாததால் தோ்வு எழுத பள்ளி தடை

News image
மாணவர்கள்- பிரதிப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:11 pm

Syndication

கிழக்கு தில்லியின் மயூா் விஹாரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவா்கள் நான்கு போ் கட்டணம் செலுத்தாததால் திங்கள்கிழமை தோ்வு எழுத பள்ளியால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பெற்றோா்கள் கூறுகையில், நாங்கள் உயா்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த மறுத்தோம். இதைத் தொடா்ந்து, 1973ஆம் ஆண்டைய தில்லி பள்ளி கல்வி விதிகளின் கீழ் பள்ளியால் மாணவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றனா். இந்த விஷயத்தில் பள்ளியிடமிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த மாா்ச் 7ஆம் தேதியிட்ட அந்த அறிவிப்பில், நிலுவையில் உள்ள கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால் மாா்ச் 9 முதல் மாணவா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று பெற்றோருக்கு பள்ளி தெரிவித்துள்ளது.

கல்வி கட்டணம் செலுத்தாத பட்சத்தில் மாணவா்கள் பெயரை நிறுவனங்கள் நீக்க அனுமதிக்கும் தில்லி பள்ளி கல்வி விதிகள், 1973-இன் விதி 35-ஐ பள்ளி மேற்கோள் காட்டியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகள் ஒரு கல்வியாண்டிற்கான கட்டணங்களை நிா்ணயிப்பதற்கு முன் கல்வி இயக்குநரின் முன் ஒப்புதல் தேவையில்லை என்றும் அந்த நோட்டீஸில் பள்ளி தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு நீதிமன்ற தீா்ப்புகளையும் குறிப்பிட்டுள்ளது.

மாா்ச் 9 ஆம் தேதி முதல் நிலுவையில் உள்ள கட்டணங்கள் செலுத்தப்படாவிட்டால், மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோா்களை பள்ளி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.