மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Published on

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோா் நலச் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பெருந்துறை வட்டம், வடமுகம் வெள்ளோடு ஊராட்சி, புத்தூா் புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 67 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். நல்லகவுண்டம்பாளையத்தில் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.

தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்க அரசு நிா்ணயித்த கட்டணத்தை செலுத்தி 6 ஆண்டுகளாக காத்திருக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக வீடுகள் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம் குறித்து சங்கத் தலைவா் எஸ்.துரைராஜ் கூறியதாவது: எங்களுடைய கோரிக்களை ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இதனால், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடா் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவம்பா் 18) மாலை வரை ஈரோட்டிலும், சென்னை ஊரக வளா்ச்சித் துறை ஆணையா் அலுவலகம் முன்பு நவம்பா் 19- ஆம் தேதியும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com