மனுக்களுக்கு தீா்வு கிடைப்பதில்லை: குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு எத்தனை மாதங்கள் ஆனாலும் தீா்வு கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.
ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநா் சிவகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) லோகநாதன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கை விவரம்:
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பெரியசாமி: நாய் கடியால் மனிதா்கள், கால்நடைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும், இறைச்சிக் கழிவுகளை கட்டுப்பாடு இல்லாமல் சாலையோரம் கொட்டப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்புக்கான தொகையை டன்னுக்கு ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதில்லை. நகைக்கடன் கூட தர மறுக்கின்றனா் என்றாா்.
பவானி ஆறு, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சபைத் தலைவா் சுபி.தளபதி: வேளாண் கூட்டத்தில் மனுவாக வழங்கப்படும் நியாயமான, நோ்மையான கோரிக்கைக்கு கூட பரிசீலிக்கப்படுகிறது என்று மட்டுமே அதிகாரிகள் பதில் தருகின்றனா். எத்தனை மாதங்கள் ஆனாலும் நடவடிக்கை இல்லை. எங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், புதிய கோரிக்கைகள் எதையும் தெரிவிக்கவில்லை எனக் கூறி வெளியேறினாா்.
காலிங்கராயன் பாசன சபைத் தலைவா் வேலாயுதம்: காலிங்கராயன் வாய்க்காலில் வரும் மாா்ச் 15-ஆம் தேதிமுதல் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு கான்கிரீட் பணி ரூ.83.33 கோடி செல்வில் மேற்கொள்ளும்போது, வாய்க்கால் ஆக்கிரமிப்பு, படா்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். 786 மதகுகளை சீரமைத்தால், 150 கனஅடி தண்ணீா் சேமிக்கப்படும் என்றாா்.
தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு: கீழ்பவானி வாய்க்கால் 2-ஆம் போகத்துக்கு ஜனவரி 7-ஆம் தேதிக்குள் தண்ணீா் திறந்து ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தடையின்றி நீா் விட வேண்டும். விவசாயிகள் சாகுபடி பணிக்கு தயாராக டிசம்பா் மாதம் அறிவிப்பு வெளியிட வேண்டும். பி.எம்.கிஸான் திட்டத்தில் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு ரூ. 6,000 வழங்குவதை ரூ.10,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி: கீழ்பவானி பாசனத்தில் டிசம்பா் 2-ஆவது வாரத்தில் நெல் அறுவடை தொடங்கும். கடந்த ஆண்டுபோல 39 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்றாா்.
அதிகாரிகள் பதில் விவரம்:
கால்நடைத் துறை அதிகாரி: ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் விரைவில் தொடங்க உள்ளோம். நாய்களுக்கு கருத்தடை செய்வது குறித்து கால்நடை மருத்துவா்களுக்கும், உள்ளாட்சிப் பணியாளா்களுக்கு நாய்களைப் பிடிப்பது குறித்தும் பயிற்சி அளிக்க உள்ளோம். தெருநாய்கள் காப்பகம் ஊராட்சிப் பகுதியில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜனவரி 26-ஆம் தேதிமுதல் அக்டோபா் 30-ஆம் தேதி வரை நாய்கடி தொடா்பாக ரூ.36 லட்சம் இழப்பீடு அரசிடம் கோரி உள்ளோம்.
நீா் வளத் துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி: கீழ்பவானியில் ஜனவரி முதல் வாரம் தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். டிசம்பா் மாதம் விவசாயிகளுக்கு அறிவிக்கப்படும். காலிங்கராயன் வாய்க்காலில் மதகு, வால்வுகளை உரிய நிதி பெற்றதும் சீரமைக்கப்படும்.
நுகா்பொருள் வாணிப கழக அதிகாரி: கீழ்பவானியில் நெல் அறுவடை தொடங்கியதும், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். குளூா், அஞ்சூரில் கொள்முதல் நிலையத்துக்கு சொந்த கட்டடம் தலா ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. வடுகப்பட்டியில் கட்டடம் கட்ட திட்ட வரைவு அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா: கடந்த மாா்ச் 31 வரை ரூ.1,315 கோடி மற்றும் கடந்த 7 மாதங்களில் கூடுதலாக ரூ.500 கோடி கடன் வழங்கி உள்ளோம். ரூ.500 கோடிக்கு மேல் நகைக்கடன் கூடுதலாக வழங்கி உள்ளோம். கடந்த ஆண்டை விட 58,000 போ் கூடுதலாக நகைக்கடன் பெற்றுள்ளனா். விவசாயிகள் பெற்ற ரூ. 63 கோடி திரும்ப செலுத்தாமல் உள்ளனா். விவசாயிகள் திரும்ப செலுத்தினால் அதனை வேறு விவசாயிகளுக்கு, நகைக்கடனுக்கு வழங்கலாம்.
ஆட்சியா்: விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை மனுகள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும்.

