சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் எஸ்.கே.பரமசிவன் உருவச் சிலை திறப்பு
பவானி: ஈரோட்டை அடுத்த சின்னியம்பாளையம் கிராமத்தில் 1919-ல் பிறந்த எஸ்.கே.பரமசிவன், கடந்த 1962-ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்டத்தில் பால் கூட்டுறவு ஒன்றியத்தை அமைக்க பெரும் முயற்சி மேற்கொண்டாா். பால் வளத்தை அதிகரிக்க இவா் செய்த பணிகளுக்காக பால்வளத் தந்தை என அழைக்கப்படுகிறாா். இவரது பெருமையைப் போற்றும் வகையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை சாா்பில் சித்தோடு ஆவின் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முழு உருவச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
விழாவில் அமைச்சா்கள் எ.வ.வேலு (பொதுப்பணித் துறை), சு.முத்துசாமி (வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை), மு.பெ.சாமிநாதன் (தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை), த.மனோ தங்கராஜ் (பால்வளத் துறை), மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் நாகரத்தினம், முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சியா் எஸ்.கந்தசாமி, பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், எஸ்.கே.பரமசிவன் குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து, தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்ற பின்னா் கோவை சென்று விமானத்தில் சென்னை புறப்பட்டாா்.

