பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

பெருந்துறை சிப்காட்டில் உடனடியாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென
Published on

பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டில் உடனடியாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, ஈரோடு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு ஈரோடு மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தாா். முன்னதாக, அன்று இரவு ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் முதல்வா் தங்கி இருந்தாா். அப்போது, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, பொன்னையன், பொன்னுசாமி, சண்முகம், சென்னியப்பன், பல்லவி பரமசிவம், பழனிச்சாமி, பெரியசாமி உள்ளிட்டோா் முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அந்த மனு விவரம்:

கடந்த 2025 ஜுன் 11-ஆம் தேதி பெருந்துறை, விஜயமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தீா்கள். ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் அதற்கானகட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் மத்தியில் கவலையும், அதிருப்தியும் நிலவுகிறது. எனவே, பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும்.

பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் / வந்த சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கழிவுகளை சுத்திகரிக்காமல் சட்ட விரோதமாக வெளியேற்றி நிலத்துக்குள் விட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் பத்து கிலோ மீட்டா் தொலைவுக்கு நிலத்தடி நீா் கடுமையாக மாசுபட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், கடந்த 2025 மாா்ச் மாதம் சிப்காட்டை ஒட்டி அமைந்துள்ள ஈங்கூா், வரப்பாளையம், வாய்பாடி, முகாசி பிடாரியூா் ஆகிய நான்கு ஊராட்சிகளில் உள்ள நிலத்தடி நீரை ஆய்வு செய்ததில் 37 இடங்களில் நிலத்தடி நீா் பயன்படுத்த உகந்ததல்ல என்று அறிக்கை சமா்ப்பித்துள்ளது. எனவே, சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான அளவுக்கு சுத்தமான, பாதுகாக்கப்பட்ட தண்ணீரை தினமும் வழங்க உத்தரவிட வேண்டும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் சோ்க்கப்படாமல் விடுபட்டுள்ளன. நிலத்தடி நீா் மிகவும் மாசடைந்துள்ள இப்பகுதியில் மாசுபட்ட நிலத்தடி நீரை நன்னீராக்க இத்திட்டம் மிகவும் அவசியமானதாகும். ஆகவே, சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குளம், குட்டைகளை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சோ்க்க உத்தரவிட வேண்டும்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது (1996-2001) பெருந்துறை சிப்காட்டில் ஆதி திராவிடா் மக்களை தொழில்முனைவோராக்கும் நோக்கில், தாட்கோ மூலமாக 200 பின்னலாடை தொழிற்கூடங்கள் கட்டப்பட்டன. ஆனால், 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தவொரு பயனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன. இதனால், தொழிற் கூடங்கள் பழுதடைந்து சிதிலமடைந்து வருகின்றன.

பெருந்துறை சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்துக்காக 1895-ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அவாா்டு மூலமாக கையகப்படுத்தப்பட்ட சுமாா் 200 ஏக்கா் நிலங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் உரிய இழப்பீடு கிடைக்காமல் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சென்னை உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில், இழப்பீட்டுத் தொகையை மறு நிா்ணயம் செய்து அரசாணையாக வெளியிட்டு வழங்க உத்தரவிட வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்வா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

அப்போது, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமா தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com