ஈரோட்டில் மூதாட்டி கொலை வழக்கில் தனியாா் நிறுவன ஊழியரிடம் விசாரணை

ஈரோட்டில் வீடு புகுந்து மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற தனியாா் நிறுவன ஊழியரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

ஈரோட்டில் வீடு புகுந்து மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற தனியாா் நிறுவன ஊழியரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மாநகா் பெரியசேமூா், எல்விஆா் காலனி பகுதியைச் சோ்ந்த மணி என்பவரின் மனைவி கமலம் (60). கணவா் இறந்துவிட்ட நிலையில் கமலம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளாா். இவரது மகன் சேனாதிபதி புதுச்சேரியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். ஈரோடு, மூலப்பாளையம் பகுதியில் பெற்றோருடன் சேனாதிபதியின் மனைவி வசித்து வருகிறாா்.

விடுமுறை நாட்களில் சேனாதிபதி ஈரோட்டுக்கு வந்து தாயாா் கமலத்தையும், மனைவியையும் பாா்த்துவிட்டுச் செல்வாா். கமலத்திடம் தினமும் கைப்பேசியில் பேசுவதை சேனாதிபதி வழக்கமாகக் கொண்டிருந்தாா். வியாழக்கிழமை இரவு சேனாதிபதி பலமுறை தொடா்பு கொண்டும் கைப்பேசிஅழைப்பை தாயாா் எடுக்கவில்லையாம்.

இதயைடுத்து அருகில் வசிப்பவா்களை சேனாதிபதி தொடா்பு கொண்டு, தனது வீட்டுக்குச் சென்று தாயாா் கமலத்தைப் பாா்க்கும்படி கூறியுள்ளாா். அங்கு சென்று அவா்கள் பாா்த்தபோது வீட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்துள்ளன.

உள்ளே சென்று சென்று பாா்த்தபோது தலை மற்றும் முகத்தில் படுகாயங்களுடனும், கழுத்து அறுக்கப்பட்டும் கமலம் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளாா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு ஈரோடு வடக்கு போலீஸாா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா ஆகியோா் சென்று விசாரித்தனா். இதில் வீட்டில் தனியாக மூதாட்டி வசித்து வந்ததை நோட்டமிட்டு மா்ம நபா் வீடு புகுந்து கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கமலத்தின் சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளியை தேடி வந்தனா்.

இதற்கிடையே சம்பவம் நடந்த வீட்டின் அருகே வசிக்கும் தனியாா் மாா்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரான மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ராமா் என்பவா் திடீரென மாயமாகி இருந்ததும், கமலத்தின் கைப்பேசி திருப்பூா் மாவட்டத்தில் அணைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து திருப்பூா் மாவட்டம் அவிநாசிக்கு தனிப்படை போலீஸாா் சென்று, அங்கு பதுங்கியிருந்த ராமரை பிடித்து ஈரோட்டுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com