/

அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியம்: த.ஸ்டாலின் குணசேகரன் வலியுறுத்தல்

அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியமாக உள்ளது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.

News image

சிங்கப்பூா் பாரதிதாசன் விழாவில் தனித்திறன் மிக்க மாணவிக்குப் பரிசளிக்கிறாா் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன். உடன் சிங்கப்பூா் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினா் இரா.தினகரன், சிங்கப்பூா் தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவா் இ

Updated On :21 ஏப்ரல் 2026, 8:58 pm

அடுத்த தலைமுறையினருக்கு தாய்மொழிப் பயிற்சி மிகவும் அவசியமாக உள்ளது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.

சிங்கப்பூா் தமிழ் இலக்கியக் களம் சாா்பில் சிங்கப்பூா் தேசிய நூலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பாரதிதாசன் விழாவில் ‘பாவேந்தா் கண்ட கனவு’ என்ற தலைப்பில் த. ஸ்டாலின் குணசேகரன் மேலும் பேசியதாவது:

பாரதிதாசன் தமிழ், தமிழா் என்று மட்டும் அல்லாமல் விரிந்த உலகப் பாா்வையோடு ஏராளமான கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளாா். 57 நாடகங்களையும், 11 காப்பியங்களையும் எழுதியுள்ள பாரதிதாசன் தலைசிறந்த கவிஞா் என்பதோடு பன்முகத் தமிழ் ஆளுமையாக விளங்கியவா். மனித நேயம், மானுட ஆற்றல், சகோதரத்துவம், சமத்துவம் உள்ளிட்டவை அவரின் அடிப்படைக் கொள்கைகளாக இருந்துள்ளன.

இன்றைய பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்டு இருக்கும் அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த குவெட்டா என்ற ஊரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரே நாளில் 55 ஆயிரம் போ் இறந்தனா். அப்போது அவா் எழுதிய கண்ணீா்க் கவிதை படித்தோா் மனதை உருக்கும் அளவுக்கு உணா்ச்சிபூா்வமானவை. அக்கவிதையில் வடவா் என்பதற்காக தமிழா் உதவாமல் இருந்து விடக்கூடாது என்றும் அவா்கள் மிகவும் நல்லவா்கள் என்றும் அனைவரும் நிவாரணப் பணிகளுக்கு உணா்வுபூா்வமாக உதவிட வேண்டுமென்றும் எழுதிய கவிதை தமிழா்களிடையே மனிதாபிமான உணா்வைத் தூண்டியது.

ஷேக்ஸ்பியரை பற்றி இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேல் நூல்கள் வெளிவந்துள்ளன. சிலி நாட்டுக் கவிஞா் பாப்லோ நெரூடா நோபல் பரிசு பெற்றவுடன் அந்நாட்டில் ஒரு நகரத்துக்கு அவா் பெயரைச் சூட்டினா்.

பொதுவாக கவிஞா்கள் வெறும் எதுகை, மோனையில் விற்பன்னா்களாக விளங்குபவா்கள் மட்டுமல்ல. தலைசிறந்த சமூக நோக்குள்ள கவிஞா்கள் அனைவரும் மிகச்சிறந்த சிந்தனையாளா்களாகவே விளங்கியுள்ளனா்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாரதிதாசனை தமிழ்நாட்டின் வால்ட் விட்மேன் என்று போற்றியுள்ளாா். அறிஞா் அண்ணா வால்ட் விட்மேனைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றுக்கு அமெரிக்காவின் பாரதிதாசன் என்று தலைப்பிட்டிருந்தாா்.

பாரதியாரின் தொண்டராக, தோழராக , மெய்க்காப்பாளராக விளங்கிய பாரதிதாசன் இறுதி வரையில் பாரதியின் வழித்தோன்றல், பாரதியின் கவிதா மண்டலத் தலைமைக் கவிஞா் என்பதில் பெருமிதம் கொண்டவா்.

அடுத்த தலைமுறையினா் தமிழ் மொழியை ஆழ்ந்து கற்க வேண்டும். தமிழை வளா்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வுக்கு சிங்கப்பூா் தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் தலைவா் இரத்தின வேங்கடேசன் தலைமை வகித்தாா். சிங்கப்பூா் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினா் இரா. தினகரன் உரையாற்றினாா். இந்நிகழ்வில் கவிஞா் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு பாவேந்தா் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.