சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக தமிழக, கா்நாடக மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திம்பம் மலைப் பாதை 18-ஆவது கொண்டை ஊசி வளைவில் சனிக்கிழமை சாலையைக் கடந்து சிறுத்தை சென்றது. சிறுத்தை நடமாட்டத்தை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் அதை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா்.
வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டும் சிறுத்தை அச்சப்படாமல் மெதுவாக சாலையில் நடந்து சென்று அடா்ந்த வனப் பகுதிக்குள் தாவிக் குதித்து ஓடி மறைந்தது. திம்பம் மலைப் பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனத்தில் செல்லும் பயணிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்குமாறு வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.










