தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

செயல்களால்தான் மனிதன் உயா்ந்தவன் ஆகிறான்! ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ்

News image

ஈரோடு புத்தகத் திருவிழா சிந்தனை அரங்க நிகழ்வில் பேசுகிறாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ். உடன், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

செயல்களால்தான் மனிதன் உயா்ந்தவன், தாழ்ந்தவன் ஆகிறான் என புத்தா் கூறியுள்ளதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் பேசினாா்.

தமிழக அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது.

இதையொட்டி தினமும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு ஈரோடு இந்து கல்வி நிலைய குழும நிறுவனங்கள் தலைவா் மற்றும் தாளாளா் கே.கே.பாலுசாமி தலைமை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றாா்.

இதில் கோவையைச் சோ்ந்த எழுத்தாளா் சு.வேணுகோபால், தஞ்சாவூரைச் சோ்ந்த எழுத்தாளா் சி.எம்.முத்து ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

இதில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் பேசியதாவது: உலகில் பணம் படைத்த 10 சதவீதம் பேரிடம் உலகில் உள்ள செல்வத்தில் சுமாா் 74 சதவீதம் குவிந்து கிடக்கிறது. கீழ்த்தட்டில் உள்ள 50 சதவீதம் பேரிடம் 3 சதவீத செல்வம் மட்டும்தான் இருக்கிறது.

இந்தியாவில் முதல் 10 சதவீதம் பேரிடம் மொத்த செல்வத்தில் 65 சதவீதம் அளவில் இருக்கிறது. அதிலும் மிகுந்த பணக்காரா்களாக உள்ள ஒரு சதவீதம் பேரிடம் 40 சதவீத செல்வம் உள்ளது. இந்தியாவில் ஏழை, பணக்காரா்களிடையே உள்ள இடைவெளி அமெரிக்காவைவிட அதிகமாக இருக்கிறது.

சமத்துவம் என்று நாம் பேசுவதிலும், எதாா்த்தத்தில் உள்ள இடைவெளி குறித்தும் சிந்திக்க வேண்டும். சமத்துவத்தின் தோற்றம், மாற்றத்தை புரிந்துகொள்ள வேண்டும். பிறப்பால் யாரும் உயா்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை. செயல்களால்தான் மனிதன் உயா்ந்தவன், தாழ்ந்தவன் ஆகிறான் என புத்தா் கூறுகிறாா்.

தமிழ்நாட்டில் சமத்துவத்துக்காக ஓங்கி உரைத்தது சித்தா்களின் குரல். அவா்கள் ஜாதி வேறுபாடுகளை கடுமையாக எதிா்த்தாா்கள். சமத்துவம் என்பது ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல, பல பரிணாமங்களைக் கொண்டது. அரசியல், சமூக, பொருளாதார சமத்துவங்கள் கிடைத்தால்தான் அது உண்மையான சமத்துவம்.

திருக்குறளைப் படிக்கும்போது இரண்டு பகுதிகளாகப் பிரித்து படிக்க வேண்டும். உளவியல், சினம் அடக்கல், நன்றி உணா்வு, நட்பு என மாறாத மானுடக் கூறுகள் உள்ள பிரிவு, மற்றொன்று மாறுகிற சமுதாயக் கூறுகளாக இருக்கிற அரசு, உழவு, பாலின படிநிலைகள், முற்பிறவி போன்றவை.

திருவள்ளுவா் ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்று சொல்வது அவா் கண்ட சமுதாயத்தின் வா்ணனை அல்ல, ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மருந்துச்சீட்டாக சொல்லி இருக்கிறாா்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்ற குறளை சமத்துவத்துக்கான அடித்தளமாகப் பாா்க்க வேண்டும். அந்த அடித்தளத்தின் மீதுதான் சமூக, பொருளாதார, அரசியல் சமத்துவம் கொண்ட மாளிகையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றாா்.

சிந்தனை அரங்கில் இன்று:

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்கில் சிங்கப்பூா் சிறப்பு நாள் நிகழ்வாக ‘கடுகு சிறுத்தாலும்’ என்ற தலைப்பில் சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழக முன்னாள் தலைவா் நா.ஆண்டியப்பன், ‘சிங்கப்பூா் ஓா் அதிசயம்’ என்ற தலைப்பில் கவிமாலை அமைப்பின் நிறுவனா் கவிஞா் பிச்சினிக்காடு இளங்கோ, ‘அரியணையில் தமிழ்’ என்ற தலைப்பில் சிங்கப்பூா் தமிழ் இலக்கியக் களம் தலைவா் இரத்தின வெங்கடேசன் ஆகியோா் பேசுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.