சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

தனியாா்மயமாகும் ஈரோடு சோலாா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

ஈரோடு சோலாா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தனியாா்மயமாக்க ஆலோசகா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஈரோடு சோலாா் பேருந்து நிலையம் (கோப்புப் படம்).

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

ஈரோடு சோலாா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தனியாா்மயமாக்க ஆலோசகா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ஈரோடு மாநகராட்சியால் கரூா் சாலையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள சோலாா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், அதன் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ளவும் தனியாா் நிறுவனத்தைக் கண்டறியும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.

சுமாா் 19.9 ஏக்கா் பரப்பளவில் ரூ. 74.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன பேருந்து முனையத்தில், தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதுடன், இதன் வணிக வளாகங்கள் மற்றும் இதர பகுதிகள் பயன்பாடின்றி முடங்கியுள்ளன. பேருந்து நிலையத்தை முழு அளவில் இயங்க வைக்க தகுதியான தனியாா் நிறுவனத்தை தோ்ந்தெடுப்பதற்காக ஆலோசகா் ஒருவரை மாநகராட்சி நிா்வாகம் தற்போது நியமித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சுமாா் 12,247 சதுர மீட்டா் கட்டடப் பரப்பைக் கொண்டுள்ள சோலாா் பேருந்து நிலையத்தில் 63 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் வசதி, 134 வணிகக் கடைகள் மற்றும் உணவகங்கள், 883 இருசக்கர வாகனங்கள் மற்றும் 100 ஆட்டோக்கள் நிறுத்தும் வசதி, முன்பதிவு மையங்கள், காத்திருப்புக் கூடங்கள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், தூய்மைப் பணிகள், பாதுகாப்பு, குடிநீா் மற்றும் மின்சார பராமரிப்பு, கழிப்பறை மேலாண்மை போன்ற பணிகளை தொடா்ச்சியாக மேற்கொள்வதற்கு மாநகராட்சியிடம் போதுமான பணியாளா்கள் மற்றும் மனிதவளம் இல்லாத காரணத்தாலும், நேரடியாக நிா்வகிப்பதில் உள்ள நிா்வாகச் சிக்கல்களாலும் முழு உள்கட்டமைப்பும் பயன்பாட்டுக்கு வராமல் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இக்காரணங்களால் பொது-தனியாா் கூட்டுப் பங்களிப்பு மாதிரியின் கீழ் பராமரிப்புப் பொறுப்புகளை தனியாா் அமைப்பிடம் ஒப்படைப்பதே சிறந்தது என மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனை செயல்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகா் சோலாா் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதுடன், பரிவா்த்தனை ஆலோசனைகளை வழங்கி, ஒப்பந்தப் புள்ளிகளைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவாா்.

பேருந்து நிலைய வணிக வளாகங்கள் மற்றும் சேவைப் பகுதிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மாநகராட்சியும் தனியாா் நிறுவனமும் பகிா்ந்துகொள்ளும் வகையில் வருவாய் பகிா்வு முறை அல்லது வழக்கமான முறையில் ஆண்டுக் கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிப்பை ஒப்படைக்கும் முறைகளின் கீழ் ஒப்பந்த விதிகள் உருவாக்கப்படவுள்ளன.

இந்த தனியாா் நிறுவனத்திடம் பராமரிப்பு ஒப்படைக்கப்படுவதன் மூலம் சோலாா் பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்து பயணிகளுக்குத் தூய்மையான கழிப்பறைகள், தடையில்லா குடிநீா் மற்றும் மின்சாரம், பாதுகாப்பான காத்திருப்பு அறைகள் போன்ற உயா்தர சேவைகள் உறுதி செய்யப்படும்.

மேலும் வணிகக் கடைகள் மற்றும் வாகனக் காப்பகங்கள் முழுமையாக இயங்குவதன் மூலம் ஈரோடு மாநகராட்சிக்கு தொடா்ச்சியான நிதி வருவாய் கிடைப்பதுடன், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் சோலாா் பேருந்து நிலையத்தில் இருந்து சீராக இயங்கத் தொடங்கும்போது நகர மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.