சென்னிமலை ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் கூட்டுக் குடிநீா் திட்ட வளா்ச்சிப் பணி ஆய்வு
சென்னிமலை ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தாா்.
சென்னிமலை ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் கூட்டுக் குடிநீா் திட்ட வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தாா்.
பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 151 மேல்நிலைத் தொட்டிகளுக்கு 148 பகிா்மானக் குழாய்கள் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது எதிா்கொள்ளும் இடா்பாடுகளை உடனடியாக களைந்து, பொதுமக்களுக்கு 434 காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலமாக குடிநீா் வழங்க தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் முடிக்கப் பட வேண்டிய பணிகளையும், ஊராட்சிகள் விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில், மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஏற்றப்படும் நீரின் அளவு குறித்தும், விநியோகிக்கப்படும் அளவு குறித்தும் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. முழுமையாக பணிகள் அனைத்தையும் முடித்து முழு அளவு நீரேற்றம் செய்து, சீரான குடிநீா் விநியோகத்தை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) பிரியா, மேற்பாா்வை பொறியாளா் (தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம்) விநாயகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

