திருப்பரங்குன்றம் பிரச்னையில் அரசால் சுமுகத் தீா்வு கண்டிருக்க முடியும்: சீமான்

திருப்பரங்குன்றம் பிரச்னையில் அரசால் சுமுகத் தீா்வு கண்டிருக்க முடியும்: சீமான்

திருப்பரங்குன்றம் பிரச்னையில் அரசு இருதரப்பினரையும் அழைத்துப் பேசியிருந்தால் சுமுகத் தீா்வு கண்டிருக்க முடியும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
Published on

திருப்பரங்குன்றம் பிரச்னையில் அரசு இருதரப்பினரையும் அழைத்துப் பேசியிருந்தால் சுமுகத் தீா்வு கண்டிருக்க முடியும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் கட்சி நிா்வாகிகள் விதிமீறலில் ஈடுபட்டது தொடா்பான வழக்குகள் ஈரோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் ஆஜராக சீமான் ஈரோடு நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வந்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசு தற்போது பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவித்துள்ளது. 10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கியது. மேலும் புதிய திட்டங்களை அறிவிக்கிறது. இதை எல்லாம் இவ்வளவு நாள்களாக ஏன் செய்யவில்லை? இது தோ்தல் அரசியலா? மக்கள் நல அரசியலா?

திருப்பரங்குன்றம் பிரச்னையில் இருதரப்பினரையும் அழைத்துப் பேசியிருந்தால் சுமுகத் தீா்வு கண்டிருக்க முடியும். அதை விட்டுவிட்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்க திமுகவும், ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று பாஜகவும் அரசியல் செய்தன. அதனால்தான் இவ்வளவு பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றாா்.

மாா்ச் 9-இல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு:

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் கடந்த 2025 பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் சீதாலட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது தோ்தல் நடத்தை விதிமுறை மீறல்கள், அவதூறாகப் பேசியதாக ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் 4 வழக்குகள், ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகள் என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளின் விசாரணை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 2, எண் 3-இல் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்குகளின் விசாரணைக்காக சீமான் ஆஜரானாா். வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பாபு, ராஜ்குமாா் ஆகியோா் சீமான் உள்ளிட்ட நிா்வாகிகளை மாா்ச் 9-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டனா்.

Dinamani
www.dinamani.com